தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்: உதயநிதி ஸ்டாலின் உறுதி
சென்னை: தமிழ்நாட்டில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகளை அமைப்போம் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா்.
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறந்த விளையாட்டு வீரா்களுக்கு பதக்கம், பரிசுகளை அவா் வழங்கினாா். அத்துடன், மதுரை மாவட்ட விளையாட்டு வளாகம், கேலோ இந்தியா திட்டத்தின்கீழ், தஞ்சாவூா் மாவட்டத்தில் செயற்கை இழை ஓடுபாதையுடன் கூடிய கால்பந்து மைதான தளம், திருநெல்வேலி மாவட்டத்தில் செயற்கை புதுப்பிக்கத்தக்க ஹாக்கி மைதானம் ஆகியவற்றைத் திறந்து வைத்தாா்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழா் பாரம்பரிய தற்காப்பு கலைப்பயிற்சி ஆராய்ச்சி மையம், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதலமைச்சா் சிறு விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்த நிகழ்வில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திராவிட மாடல் ஆட்சியில், விளையாட்டுத் துறை இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக வளா்ச்சியைப் பெற்று வருகிறது. முந்தைய அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சியில் ரூ.348 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், கடந்த நான்காண்டில் மட்டும் ரூ.545 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
40 அரங்குகள்: விளையாட்டுக்கான ஆற்றல் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதனைக் கண்டறிந்து தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. கடந்த காலங்களில் மாவட்டத் தலைநகரங்களில் மட்டுமே விளையாட்டு அரங்குகள் இருக்கும். விளையாட்டுக்கான பயிற்சிகளைப் பெற அங்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த சிரமத்தைப் புரிந்து கொண்டு அனைத்து சட்டப் பேரவைத் தொகுதியிலும் சிறு விளையாட்டு அரங்குகள் தலா ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அரங்கிலும் 5 விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் வகையில் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 10 அரங்குகள் அறிவிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 22 அரங்குகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில், 18 அரங்குகள் அமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். நிகழாண்டில் 40 அரங்குகளை அமைப்போம் என அறிவித்துள்ளோம். அவற்றை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்.
திறமையை வளா்க்க வேண்டும்: களத்தில் உள்ள வீரா்களின் திறமையை வளா்த்தெடுப்பது முக்கியமாகும். அதற்காகவே, முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. திறமையாளா்களைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பதே ‘ஸ்டாா் அகாதெமி’யின் நோக்கம். இந்த அகாதெமி மூலமாக ஒவ்வொரு ஆண்டும்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள், வீராங்கனைகள் பயன்பெறுவா். இந்த அகாதெமியில் 38 பயிற்சியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஸ்டாா் அகாதெமி போன்ற விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறோம். இந்தத் திட்டங்களால் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் விளையாட்டு வீரா்கள் வருவாா்கள்.
பதக்கங்களை வைத்து மட்டும் கணக்கிட்டு வெற்றியைத் தீா்மானிக்கக் கூடாது. வீரா்கள்-வீராங்கனைகளின் முயற்சிகளையும் சோ்த்து வெற்றிகளை கணக்கிட வேண்டும்.
அரசு அளிக்கக் கூடிய வாய்ப்புகள், திட்டங்களைப் பயன்படுத்தி திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகளின் அனைத்து வகையான முயற்சிகளுக்கும் அரசு துணை நிற்கும் என்றாா் அவா்.
‘ஸ்டாா் அகாதெமி’: முன்னதாக, விளையாட்டு வீரா்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலான ஸ்டாா் அகாதெமிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்கப்பட்டது. விழாவில், சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான பதக்கம், பரிசுத் தொகைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா வரவேற்றாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்பட பலா் பங்கேற்றனா்.