DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் நிப்பேன்!" - சந்தானம்
சந்தானம் நடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்தானம் & கோவுடன், கெளதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் வருகிற 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில் சந்தானம் பேசுகையில், "தில்லுக்கு துட்டு 1, 2, டிடி நெக்ஸ்ட் லெவல் படங்கள்ல முக்கியமான பங்காக இருந்த இந்திரா செளந்தர்ராஜன் சார் இன்னைக்கு நம்மகூட இல்ல.
அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. சிம்பு சார் இன்னைக்கு வந்திருக்காரு. அவர் இல்லைனா, நான் இன்னைக்கு இங்க இல்ல.
அவருடைய 'காதல் அழிவதில்லை' படத்துல நான் பின்னாடி நிக்கிற ஒருவனாக நடிச்சிருப்பேன்.
அதுல என்னுடைய நடிப்பை கவனிச்சாரு. பிறகு, எனக்கு மன்மதன் படத்துல வாய்ப்பைக் கொடுத்தாரு.
அந்தப் படத்தோட முதல் நாள் படப்பிடிப்புல 'உங்களுக்கான இன்ட்ரோ சீன்ல பில்டப் வைக்கிறோம்'னு சொன்னாரு.
'லொள்ளு சபா மக்கள்கிட்ட நல்லா ரீச் ஆகியிருக்கு. மக்கள் கண்டிப்பாக கைதட்டுவாங்க'னு சொன்னாரு.
எனக்கு கைதட்டுவாங்களானு நான் கேட்டேன். அப்படி திட்டமிட்டுதான் அந்தப் படத்துல என்னுடைய பெயர் சொல்ற காட்சியை வச்சாங்க.
அன்னைக்கு எனக்கு கைதட்டல் வரணும்னு பண்ணியவர் இன்னைக்கும் அதே விஷயத்தை பண்றாரு.
ஒவ்வொரு நேரமும் எனக்காக மற்றவர்களிடம் சில விஷயங்கள் யோசிக்க சொல்வாரு. எப்போதுமே அவர் பின்னாடி நான் இருப்பேன்.

இந்தப் படத்தோட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்யா என்னுடைய உயிர் நண்பன்.
ஆர்யா 'சேட்டை' திரைப்படத்துல எனக்கு காமெடி சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டான்.
'லிங்கா' படத்துல நான் நடிக்கும்போது ரஜினி சார் என்கிட்ட 'நீங்க காமெடி சூப்பர் ஸ்டாரா'னு கேட்டாரு.
நான் அவர்கிட்ட 'ஆர்யா படத்துல போட்டான்'னு சொன்னேன். 'உங்களைக் கேட்காமல் போட்டுருப்பாரா'னு ரஜினி சார் கேட்டாரு.
நான் சமீபத்துல ஒரு இடம் வாங்கினேன். அங்க பழைய வீடு ஒன்னு இருந்தது. என்னுடைய அம்மாவும், மனைவியும் வெள்ளிக்கிழமைகள்ல அங்க போய் விளக்கேத்துவாங்க.
அப்படி ஒரு நாள் அந்த வீட்டுக்கு ஆர்யா வந்தான். 'வீடு பழையதாக இருக்கு மச்சா. இடிச்சிட்டு புதுசா கட்டு'னு சொன்னான்.
அப்புறம் அவனுமே ஆள் வர வச்சு இடிச்சுட்டான். அந்த வீடு தரைமட்டம் ஆகிடுச்சு.
அடுத்த வாரம் எங்க அம்மா, அந்த வீட்டுக்கு விளக்கேத்த வரும்போது வீட்டைக் காணலனு தேடுனாங்க.

அப்புறம்தான் இடிச்ச விஷயத்தை நான் அம்மாகிட்ட சொன்னேன். அவங்க 'படத்துலதான் இப்படினா, நேர்லையும் இப்படிதான் இருப்பீங்களா'னு கேட்டாங்க.
இயக்குநர்கள் கெளதம் மேனன் சார், செல்வராகவன் சார் பண்ணியிருக்கிற விஷயங்கள் உங்களுக்கு கண்டிப்பாக ட்ரீட்டாக இருக்கும்.
என்னுடைய படத்தையும் ரசிக்கிறீங்க. அதுக்கெல்லாம் நன்றி!" எனக் கூறி முடித்துக் கொண்டார்.