36 இலக்கத்தில் வங்கிக் கணக்குக்கு வந்த பணம்; சில மணி நேரத்தில் எலான் மஸ்குக்கு டஃப் கொடுத்த விவசாயி!
உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிப்பவர் அஜித். சாதாரண விவசாயத் தொழிலாளியான இவரின் வங்கிக் கணக்கில் சில ஆயிரங்களை சேமிப்பாக வைத்திருந்தார். கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அவரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,800 எடுக்கப்பட்டது.
அதற்கான காரணம் குறித்து வங்கியிடம் விசாரிக்க வேண்டும் என நினைத்த சில மணி நேரங்களில் மீண்டும் ரூ.1,400 எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மன வேதனையில் இருந்த அவரிடம் குடும்ப உறுப்பினர்கள் வங்கியிடம் நேரில் சென்று முறையிடலாம் எனக் கூறிவந்தனர்.

இந்த நிலையில்தான் திடீரென அவரின் வங்கிக் கணக்கில் ரூ.1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 வரவு வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கின் சொத்து மதிப்பை விட அதிகமான தொகை.
இதன்படி பார்த்தால் உலகின் 'நம்பர் ஒன்' பணக்காரராக சில நிமிடங்களில் மாறினார் அஜித். இந்தத் தொகையைப் பார்த்ததும் அஜித்தின் மனைவி இது ஏதேனும் சதித்திட்டமாக இருக்குமோ, அல்லது சைபர் கிரைமாக இருக்குமோ என பெரும் கவலையில் ஆழ்ந்தார். உடனே வங்கி அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு பேசினார்.
அதற்கு அந்த அதிகாரி, ``ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒரு வங்கிக் கிளையின் கணக்கு சரிபார்க்கும்போது தொழில்நுட்பக் கோளாரால் இந்தத் தவறு நடந்திருக்கிறது" என்றார். ஆனாலும், அந்தப் பணம் வங்கி கணக்கிலேயே இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, காவல் நிலையத்துக்குச் சென்ற அஜித், காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைப் படி, சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.
தற்போது அஜித்தின் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கபப்ட்ட ரூ.3,200 திரும்ப கிடைக்குமா அல்லது தான் ஏமாற்றப்பட்டோமா என வருத்தத்தில் இருக்கிறார்.