ஊடகத்துறையினருடன் சந்திப்பு.. தயங்காமல் விமர்சியுங்கள், பாராட்டுங்கள் - முதல்வர...
இறுதிக்கட்டத்தை எட்டும் ஐபிஎல்! பிளே-ஆஃப் பந்தயத்தில் நீடிக்கப் போவது யார்?
ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் தலா 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியிருந்தாலும் இன்னும் அடுத்தச் சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருக்கின்றன. இருப்பினும், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் வெளியேறிவிட்டன.
இருந்தாலும், ‘ஸ்பாயில் த பார்ட்டி’ என்று அழைக்கப்படக்கூடிய தகுதிப் பெறும் அணிகளின் வெற்றி வாய்ப்புகளையும் இந்த அணிகள் தட்டிப்பறிக்கும் நிலையும் உள்ளது. இவர்களைத் தவிர்த்து மற்ற 7 அணிகளும் பிளே-ஆஃப் ரேஸில் நீடிக்கின்றன. அவற்றில் யாருக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளில் பெங்களூரு அணிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது. மீதமுள்ள இடங்களுக்கு பஞ்சாப், குஜராத், மும்பை, தில்லி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் ஆர்சிபி, 2 போட்டிகளில் வெற்றிபெற்றால் முதலிடத்தோ அல்லது குறைவாக வெற்றி பெற்றால் 2-வது இடத்தைப் பிடிக்கும்.
பஞ்சாப் கிங்ஸ்
லக்னௌவுக்கு எதிரான வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி, வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளதால் அதே வேகத்தில் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் முனைப்பில் இருக்கிறது. நல்ல ரன்நேட் இருப்பதால் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் பஞ்சாப் அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற்றுவிடும். 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ்
முதலில் தோல்வியைச் சந்தித்தாலும் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்ற மும்பை 11 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. பிளே- ஆஃப் ரேஸில் நீடிக்க வேண்டுமானால், மீதமுள்ள 3 போட்டிகளில் 2-ல் கட்டாயம் வென்றாக வேண்டும்.
குஜராத் டைட்டன்ஸ்
10 போட்டிகளில் விளையாடியுள்ள 14 புள்ளிகளுடன் உள்ள குஜராத் மீதமுள்ள 4 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றால் முதல் 4 இடங்களைப் பிடிக்கும்.
தில்லி கேப்பிடல்ஸ்
முதல் 4 போட்டிகளில் வெற்றிபெற்று கம்பீரமாக வலம்வந்த தில்லி அணி, மும்பைக்கு எதிரான தோல்வியின் மூலம் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வருகிறது. ஹைதராபாத்துக்கு எதிரான போட்டி முடிவில்லாமல் போன நிலையில், மீதமுள்ள மூன்று போட்டிகளில் 2-ல் வென்றாக கட்டாயத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
14 புள்ளிகளுடன் இருக்கும் கொல்கத்தா மீதமிருக்கும் போட்டிகளில் வென்றால் 17 புள்ளிகளைப் பெறும். இருந்தாலும் கொல்கத்தாவின் மிகவும் குறைவான ரன் ரேட் அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது.
லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்
11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளுடன் இருக்கும் லக்னௌ இன்னும் மீதமிருக்கும் 3 போட்டிகளில் வென்றாலும், 16 புள்ளிகளுடன் மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
பிளே-ஆஃப் ரேஸில் இருக்கும் அனைத்து அணிகளும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், வெளியேறிய அணிகள் அவர்களைத் தோற்கடித்து அவர்களில் பிளே-ஆஃப் கனவைத் தகர்க்கும் முனைப்பில் இருப்பதால் இனிவரும் போட்டிகளில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது!
இதையும் படிக்க:தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?