கல்லூரி வளாகத்தில் டிரைவர் வெட்டிக் கொலை... போலீஸ் விசாரணை!
சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிரைவராக வேலை செய்து வந்தார். அதோடு ஆம்புலன்ஸ் டிரைவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள டிரைவர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் இன்று காலை தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், மணிகண்டனை சரமாரியாக அரிவாளால் வெட்டிச் சாய்த்தது. முதல் வெட்டு விழுந்ததும் கண்விழித்த மணிகண்டன், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் மர்ம கும்பல், சுற்றி வளைத்து மணிகண்டனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் கிளாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின் ராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின்னர் மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக டிரைவர் மணிகண்டன் கொலை செய்யப்பட்டார் என போலீஸார் விசாரித்து வருகிறார்கள். முதற்கட்டமாக கொலை நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கோஷமிட்டனர். அப்போது இந்தக் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் சடலத்தை கல்லூரி வளாகத்துக்குள் கொண்டு செல்வோம் என கோஷமிட்டனர். அவர்களிடம் கிளாம்பாக்கம் போலீஸார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதோடு கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகளை அமைத்து தேடி வருகிறார்கள்.