தஞ்சாவூர்: பாஜக முன்னாள் மகளிரணி நிர்வாகி கொலை வழக்கு - சரண்டரான கணவரின் முதல் மனைவி மகன்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன் (45). திமுகவிலிருந்து பா.ஜ.க-விற்கு மாறிய இவர் மதுரை மேலுார் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். பா.ஜ.க-வின் பொருளாதாரப் பிரிவு மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்தார்.
மதுரை செல்லுாரைச் சேர்ந்த பா.ஜ.க முன்னாள் மகளிரணி பொறுப்பாளர் சரண்யா (35). இவரின் முதல் கணவர் சண்முகசுந்தரம் 2021ல் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. பாலனுக்கு ஏற்கெனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு உள்ளிட்ட பிரச்னை காரணமாக பாலனுக்கும் முதல் மனைவிக்கும் விவகாரத்து தொடர்பான வழக்கு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பாலனும், சரண்யாவும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்திற்குக் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் வந்து செட்டிலானவர்கள், அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் என்கிற பெயரில் கடை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் கடைகளை பூட்டி விட்டு டூ வீலரில் வீட்டிற்கு சென்று விட்டனர். சரண்யா கடையில் பால் வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து, மூன்று நபர்கள் சரண்யாவின் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த வாட்டாத்திக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலை நடந்த இடத்தில் நேற்று நள்ளிரவு எஸ்.பி ராஜாராம் விசாரணை நடத்தினார். இதற்கிடையே கடந்த 2022-ம் ஆண்டு, தீவிரவாத தாக்குதலில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி செலுத்திய போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பா.ஜ.க மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்து, தற்போது அ.தி.மு.கவில் இருக்கும் டாக்டர் சரவணன் தரப்புக்கும் பிரச்னை எழுந்தது.
இதில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் மதுரை மத்திய தொகுதி மாநகர் பா.ஜ.க மகளிரணி பொறுப்பில் இருந்த சரண்யா, தெய்வயானை, தனலட்சுமி ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். சின்ட்ரெல்லா சரண்யா என்றால் மதுரையில் பரிச்சயம். தற்போது பாலன் மற்றும் சரண்யா ஆகிய இருவரும் பா.ஜகவில் எந்த பொறுப்பிலும் இல்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் உதயசூரியபுரம் வந்து விட்டனர்.

இதற்கிடையே, இந்த கொலை தொடர்பாக பாலனின் முதல் மனைவியின் மகன் கபிலன் (20), அவரது நண்பர்களான பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (20), மேலூர் தனியாமங்கலம் பாரதிநகரை சேர்ந்த குகன்(20) ஆகிய 3 பேர் மதுரை மாவட்ட 6 ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுப்புலெட்சுமி முன்பாக சரணடைந்தனர். வேறு மாவட்டத்தை சேர்ந்த வழக்கு என்பதால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து வாட்டாத்திகோட்டை காவல்துறையினர் மூவரையும் தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்துசென்றனர். சொத்து பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.