`நான் அப்ளை செய்திடறேன்' - நீட் தேர்வுக்கு போலி ஹால் டிக்கெட் தயாரித்துக் கொடுத்த இளம்பெண் கைது!
மருத்துவப் படிப்புக்கான தகுதித்தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா அரசு மேனிலைப் பள்ளியில் நடந்த நீட் தேர்வு எழுத திருவனந்தபுரத்தை அடுத்த பாறசாலையைச் சேர்ந்த ஜித்து (20) என்ற மாணவர் சென்றார். அவர் தேர்வு எழுதும் செண்டர் பெயர் மாறி இருந்தாலும், அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே பயோ மெட்ரிக் மூலம் மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. அதில் ஜித்து என்ற பெயரில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவே இல்லை என தெரியவந்தது. அதற்குள் அந்த மாணவன் சுமார் ஒரு மணி நேரம் தேர்வு எழுதியிருந்தார். இதையடுத்து தேர்வு நடத்திய அலுவலர் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அந்த மாணவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவர் நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள அக்ஷயா கம்ப்யூட்டர் செண்டரில் ஹால் டிக்கெட் பிரின்ட் அவுட் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நெய்யாற்றின்கரை அக்ஷயா கம்ப்யூட்டர் செண்டருக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில் போலி ஹால் டிக்கெட் தயாரித்து கொடுத்தது அந்த கம்ப்யூட்டர் செண்டரில் வேலை செய்யும் பெண் ஊழியர் கிரீஷ்மா என்பது தெரியவந்தது. மாணவரின் தாய் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பணம் கொடுத்ததாகவும், விண்ணப்பிக்க மறந்துவிட்டதாகவும்... தேர்வு நெருங்கிய நிலையில் மாணவனின் தாய் ஹால் டிக்கெட் கேட்டதால், போலி ஹால் டிக்கெட் தயாரித்து கொடுத்ததாகவும் கூறி உள்ளார். இதையடுத்து கிரீஷ்மா கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், "நீட் தேர்வில் போலி ஹால் டிக்கெட்டுடன் சென்ற மாணவரின் தேர்வு மையம் பத்தனம்திட்டா மார்தோமா மேனிலைப் பள்ளி என குறிபிடப்பட்டிருந்தது. அவர்கள் அந்த பள்ளிக்கு காலையில் சென்றபோது அது நீட் தேர்வு செண்டர் இல்லை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அருகில் அரசு மேனிலைப்பள்ளியில் நீட் தேர்வு எழுதச் சென்றார். அங்கு தேர்வு நடத்துபவர்கள் மாணவன் செண்டர் மாறி வந்துவிட்டதாக நினைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் மாணவன் தேர்வு எழுதினார். அப்போது பயோ மெட்ரிக் பரிசோதனை மேற்கொண்டபோது, அந்த பெயரில் மணவர் யாரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரியவந்தது.

இதையடுத்து போலி ஹால் டிக்கெட் மூலம் மாணவன் தேர்வு எழுதுவதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவரிடமும், அவரது தாயிடமும் விசாரணை நடத்தினோம். நீட் தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்காக மாணவரின் தாய் அக்ஷயா கம்ப்யூட்டர் செண்டருக்குச் சென்று கிரீஷ்மாவிடம் கூறியுள்ளார். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதாக கூறி மாணவரின் தாயிடம் இருந்து 1250 ரூபாய் வாங்கியுள்ளார் கிரீஷ்மா. தேர்வு நாள் நெருங்கியது... ஹால் டிக்கெட் வேண்டும் என மாணவரின் தாய் கேட்டுள்ளார். கிரீஷ்மா போலியாக ஹால் டிக்கெட் தயாரித்து அதை அந்த மாணவரின் அம்மாவுக்கு அனுப்பிக் கொடுத்தார். அந்த ஹால் டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு எழுதச் சென்ற போதுதான் போலி என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கிரீஷ்மாவை கைது செய்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.