India - Pakistan: அமெரிக்கா, சீனா, மலேசியா... போர் ஏற்பட்டால் உலக நாடுகள் யார் ப...
விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயிலில் தீ மிதி திருவிழா!
விராலிமலை: விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மெய்கண்ணுடையாள் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் 8-ம் நாளான இன்று(மே 6) முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழாண்டு, கடந்த ஏப்ரல், 29-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது, தினமும் காலை, மாலை வேளைகளில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவின் 8-ம் நாளான (இன்று) செவ்வாய்க்கிழமை, கோயில் முன்னாள் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் (தீ குண்டம்) நூற்றுக்கணக்கான பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து ஓம் சக்தி பராசக்தி முழக்கமிட்டு தீ குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தொடர்ந்து, மா விளக்கு, குழந்தைகளை சுமக்கும் கரும்பு தொட்டி, ஈரத்துணியுடன் தரையில் உருண்டபடி கோயில் வளாகத்தை சுற்றி வரும் அங்கபிரதட்சணம், பால்குடம் உள்ளிட்ட வழிபாடுகளை ஆண்கள், பெண்கள் செய்தனர்.
9- ஆம் விழாவான நாளை புதன்கிழமை(மே 7) ஆடு, கோழி பலியிடுதல் நிகழ்வும் மாலையில் இளைஞர்களின் படுகளம் விளையாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் நூற்றுக்கணக்கான போலீஸார் விராலிமலை முழுவதும் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!