ஆலங்குடி அருகே இருதரப்பினரிடையே மோதல்: குடிசை, வாகனங்களுக்கு தீ வைப்பு!
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் திங்கள்கிழமை இரவு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவலர் உள்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குடிசை, வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. அப்போது, கடைவீதியில் உள்ள கோயில் நுழைவாயில் அருகே இளைஞர்கள் சிலரிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், அது இரு தரப்பு இளைஞர்களிடையே மோதலாக மாறியுள்ளது. அதில், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களில் தாக்கியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அப்போது, மோதலை தடுக்க முயன்ற காவலர் முத்துக்கிருஷ்ணனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த இருதரப்பைச் சேர்ந்த அனைவரும் மீட்கப்பட்டு வடகாடு, ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, ஒரு தரப்பினரின் குடிசைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மற்றொரு தரப்பினர் தாக்குதலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசுப் பேருந்து, காவல் வாகனத்தின் கண்ணாடியை அடித்து சேதப்படித்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் அயிஷேக் குப்தா தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து திங்கள்கிழமை நள்ளிரவே சம்பவ இடத்திற்கு சென்ற சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தீக்கிரையான வீடு, வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக வடகாடு போலீஸார் இரு தரப்பைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி இடையே பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இயக்கப்படவில்லை.