அடகுக் கடையில் 250 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி திருட்டு!
அரியலூர்: அரியலூரில் அடகுக் கடையில் 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற ராஜஸ்தானைச் சேர்ந்த பணியாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், வில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விகாஸ்ஜெயின். இவர், அரியலூரில் தங்கி, அங்கு சின்னக்கடைவீதியில் அரிஹந்த் சிவன் பேங்கர்ஸ் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக அடகுக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தனது தாயாரை பார்க்க ராஜஸ்தான் சென்றுள்ளார்.
இதற்கிடையே அவர், ராஜஸ்தானைச் சேர்ந்த ஆசாத் லோடா என்பவரை கடைக்கு வேலைக்கு சேர்த்துள்ளார். இக்கடைக்கு வரும் அடகு நகைகளை, உறவினர் கடையான நானேஸ் பேங்கர்ஸ் அடகு கடையிலுள்ள பெட்டகத்தில் வைப்பது வழக்கம்.
அதன்படி, கடந்த 3 ஆம் தேதி பாதுகாப்பு பெட்டகத்தில் நகைகளை வைக்கச் சென்ற கடை பணியாளர் ஆசாத்லோடா மாயமாகியுள்ளார். அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விகாஸ்ஜெயின், நேரில் வந்து பெட்டகத்தை பார்த்த போது, அதில் இருக்க வேண்டிய 250 சவரன் தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவை காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் அரியலூர் நகர காவல் துறையினர், செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஜராவில்லை என்றால் குற்றச்சாட்டு பதியப்படும்: நீதிபதி எச்சரிக்கை