Ooty: காட்டு மாட்டை சுட்டுக்கொன்ற கேரள கடத்தல் கும்பல்.. நீலகிரியில் தொடரும் வனவிலங்கு வேட்டை
மரக்கடத்தல் முதல் வனவிலங்கு வேட்டை வரை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வனக்குற்றங்கள் அதிகரித்து வரும் நீலகிரியில் கேரள வேட்டை கும்பலின் அத்துமீறல் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக காட்டு மாடு வேட்டை கண்மூடித்தனமாக நடைபெற்று வருகிறது.

வனவிலங்குகளை வேட்டையாட துப்பாக்கி தோட்டாக்கள், வெட்டி பார்சல் செய்ய கத்தி, கோடாரிகள் கச்சிதமாக காரில் முழு தயாரிப்புடன் சுற்றுலா பயணிகள் போல வாகனங்களில் ஊடுருவும் கேரள வேட்டைக் கும்பல்கள், இரவோடு இரவாக காட்டு மாடுகளை வேட்டையாடி இறைச்சியை கேரளாவிற்கு கொண்டுச் செல்கின்றனர்.
இந்த நிலையில், ஊட்டி அருகில் உள்ள கப்பத்தொரை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடமாடிய வேட்டையர்கள், அந்த பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காட்டு மாட்டினை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். தோட்டா சத்தம் கேட்டு மக்கள் கூடியதைத் தொடர்ந்து அங்கிருந்து வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

கேரள பதிவெண் கொண்ட அந்த வாகனத்தை விரட்டிச் சென்ற வனத்துறையினர், கூடலூர் அருகில் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு மாட்டை வேட்டையாடிய கேரள மாநிலம் வழிக்கடவு பகுதியைச் சேர்ந்த அனீஷ் மோன், நிஷார் ஆகிய இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.