வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!
பஹல்காம் தாக்குதல் முன்கூட்டியே தெரியுமா? பொறுப்பின்றி பேசுகிறார் கார்கே - பாஜக
பாகிஸ்தானுடன் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பற்ற கருத்தைத் தெரிவித்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையான கருத்துகளைக் கூறும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பட்டியலில் கார்கேவும் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட சுற்றுலாத் தலமான பஹல்காமின் பைசாரான் பள்ளத்தாக்கில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தானே காரணம் என தொடர்ந்து கூறிவரும் இந்தியா, தக்க பதிலடி கொடுக்கும் வகையில் படைகளைத் தயார்ப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் பதிலடி தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். நாடு முழுவதும் நாளை (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து மூன்று நாள்களுக்கு முன்பே தெரியும் என்பதால்தான் ஜம்மு - காஷ்மீர் பயணத்தை பிரதமர் ரத்து செய்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இந்தக் கருத்து குறித்து பதிலளித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவர் (கார்கே) என்ன மாதிரியான கருத்தைக் கூறுகிறார். ஒருபுறம், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர்கள் (காங்கிரஸ்) நாட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறுகிறார். மறுபுறம் நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
ஒரு பெரிய கட்சியின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியில் மூத்த தலைவரிடமிருந்து இதைவிட பொறுப்பற்ற கருத்து வராது. பாதுகாப்பு ஒத்திகையில் மக்கள் அனைவரும் நாட்டுடனும் அரசுடனும் உறுதுணையாக இருக்கும்போது, இதுபோன்ற கருத்துகளை எதிர்க்கட்சியினர் தெரிவிப்பது மிகுந்த மனவேதனையை உண்டாக்குவதாகக் குறிப்பிட்டார்.