யேமனின் முக்கிய விமான நிலையம் முழுவதுமாகத் தகர்ப்பு: இஸ்ரேல் ராணுவம்!
யேமனின் தலைநகரிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஆதரவுப் பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை கடந்த மே.4 ஆம் தேதியன்று இஸ்ரேலின் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது முதல் முறையாக ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தினர்.
இதில், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் அருகில் அந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அங்கு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மேலும், நான்கு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலடி தரும் விதமாக, கடந்த மே.5 ஆம் தேதியன்று யேமனின் ஹுதைதா மாகாணத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, யேமனின் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தபோவதாகவும் அப்பகுதிவாசிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் இஸ்ரேல் ராணுவம் இன்று (மே.6) எச்சரிக்கை விடுத்தது.
இந்த எச்சரிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே யேமனின் தலைநகர் சனாவின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தது. இந்தத் தாக்குதலில் யேமனின் முக்கிய பன்னாட்டு விமான நிலையம் முழுவதுமாக தகர்க்கப்பட்டு சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களில், விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளதை ஹவுதி படைகளின் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான விடியோக்களில், சனா நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு அப்பகுதி புகைகள் சூழ்ந்து காணப்பட்டது பதிவாகியுள்ளது.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜெர்மனி பிரதமராக ஃப்ரைட்ரிச் மெர்ஸ் தேர்வு!