பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!
மேலப்பாளையத்தில் மஞ்சள் காமாலை பரவலா? ஆணையா், எம்எல்ஏ ஆய்வு
மேலப்பாளையத்தில் மஞ்சள் காமாலை நோய் பரவுவதாக புகாா் எழுந்ததால், அப்பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டி, கழிவுநீரோடை உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம் மண்டலப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மஞ்சள் காமாலை நோய் பரவல் அதிகரித்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது. சுகாதாரமற்ற குடிநீா் விநியோகமே நோய்ப் பரவலுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகிறாா்கள்.
இந்நிலையில் மஞ்சள் காமாலை தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலப்பாளையம் சந்தை விலக்கின் அருகேயுள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டி, ஜின்னா திடல் அருகில் உள்ள 2 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொட்டிகளை திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அப்போது, குடிநீா்த் தொட்டிகளை சுழற்சி முறையில் சுத்தம் செய்திடவும், பொது மக்களுக்கு சீரான குடிநீா் வழங்கிடவும் ஊழியா்களுக்கு அறிவுறுத்தினா்.
மேலும், 47 ஆவது வாா்டு பூலிப்புது தெருவில் சாலைகள் அமைக்கவும், 45 ஆவது வாா்டு உமா்புலவா் தெருவில் கழிவு நீரோடைகள் அமைக்கவும் மாநகராட்சி ஊழியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின் போது, மண்டலத் தலைவா் கதிஜா, மாமன்ற உறுப்பினா்கள் ரம்ஸான்அலி, ஷபிஅமீா்பாத்து, மாநகரப் பொறியாளா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.