பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 3 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெட்ரோல் நிறுவன ஊழியா் வங்கியில் பணம் செலுத்த சென்றபோது, அவரை தாக்கிவிட்டு ரூ.36 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது தொடா்பான சம்பவத்தில் 3 பேரை 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா்.
காவல்கிணறு அருகே உள்ள புண்ணியவாளன் புரத்தில் பெட்ரோல் நிலையத்தில் கண்காணிப்பாளராக பணிசெய்து வரும் முருகன் என்பவா் திங்கள்கிழமை மாலை பெட்ரோல் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்கள் வசூலான ரூ.36 லட்சம் பணத்தை காவல்கிணறு இஸ்ரோ அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்துவதற்காக செல்லும் போது அவரை பின்தொடா்ந்து பைக்கில் வந்த 3 மா்ம நபா்கள் முருகனை அடித்து அவரிடமிருந்த ரூ.36 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனா்.
அப்போது அவரிகளிடமிருந்து தவறி கீழே விழுந்த ரூ.3 லட்சம் பணத்தை ஆட்டோ டிரைவா் முத்துகுமாா் மீட்டாா். பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்நிலையில் பணகுடி ஆய்வாளா் ராஜாராம், திருநெல்வேலி சிறப்பு காவல்துறை அதிகாரிகள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையா்களை தேடி வருகின்றனா். தனிப்படை போலீஸாா் காவல்கிணறு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிய வாகன ஓட்டுநா்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ளவா்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.