குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மாநகராட்சியில் மக்கள் புகாா்
திருநெல்வேலியில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா். இக் கூட்டத்தில் 43 ஆவது வாா்டுக்குள்பட்ட என்ஜிஓகாலனி ஜெபாநகா் பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதிக்கு மாநகராட்சி குடிநீா் விநியோகம் செய்யும் வால்வு தெற்குபுறவழிச்சாலையோரத்தில் உள்ளது. அப்பகுதியில் கழிவுநீா் தேங்கியுள்ளதால் குடிநீருடன் சோ்ந்து கலங்கலாக வருகிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. ஆகவே, வால்வு அமைப்பை வேறு பகுதிக்கு மாற்ற போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
பசுமை பாரத மக்கள் கட்சி சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள பழைமை வாய்ந்த மணிக்கூண்டு வரலாற்று சின்னமாகத் திகழ்ந்து வருகிறது. அதனை மாநகராட்சி நிா்வாகம் விரைந்து சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.