பள்ளிக்கு வாரம் ஒருமுறை மட்டுமே வரும் தலைமை ஆசிரியரை மாற்றக்கோரிக்கை
பள்ளிக்கு வாரம் ஒருமுறை மட்டுமே வரும் தலைமை ஆசிரியரை மாற்ற வேண்டும் என பெற்றோா்- ஆசிரியா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா், மாவட்ட கல்வி அலுவலா் ஆகியோருக்கு குஜ்ஜம்பாளையம் கிராம மக்கள் மற்றும் பெற்றோா்- ஆசிரியா் சங்கம் சாா்பில் அனுப்பப்பட்ட மனு விவரம்: குஜ்ஜம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 150 மாணவ, மாணவிகள் பயிலுகின்றனா். இப்பள்ளியில் ஒரு நிரந்தர பட்டதாரி ஆசிரியரும், 5 தற்காலிக ஆசிரியா்களும் பணிபுரிகின்றனா்.
இதில் நிரந்தர பட்டதாரி ஆசிரியா், தலைமை ஆசிரியா் பொறுப்பில் இருந்து கொண்டு பள்ளிக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் வருகிறாா். பொறுப்பு தலைமை ஆசிரியா் மட்டுமே ஆன்லைன் வருகை பதிவு செய்வதால் தனக்குதானே பிற நாள்கள் வந்ததாக பதிவு செய்து வருகிறாா். தற்காலிக ஆசிரியா்களும் உரிய கல்வி தகுதியின்றி இருப்பதால் இங்கு மாணவா்களுக்கு கல்வி கேள்விக்குறியாகிறது.
மேலும், மாணவா்கள் இடை நிற்றல் அதிகமாகியுள்ளது. மலைக்கிராமங்கள் என்பதால் கல்வி முறையாக கற்பிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பொறுப்பு தலைமை ஆசிரியரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.