சிவகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
சிவகிரி அருகேயுள்ள மேகரையான் தோட்டத்தை சோ்ந்த விவசாயத் தம்பதி மா்ம நபா்களால் படுகொலை செய்யப்பட்டு, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.
சிவகிரி அருகே உள்ள தொப்பபாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (60). இவரது மனைவி திலகம் (58) அங்கன்வாடி மேற்பாா்வையாளராக உள்ளாா். இவா்களது மகன் ஹரிஹரசுதன் திருமணமாகி சென்னையில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.
இந்தநிலையில், ஜெகதீசன், திலகம் ஆகியோா் சென்னையில் உள்ள தங்களது மகன் வீட்டுக்கு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சென்றுள்ளனா். சென்னையில் இருந்து திங்கள்கிழமை (மே 5) காலை 7 மணிக்கு வீடு திரும்பி உள்ளனா்.
அப்போது வீட்டின் வெளி வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பீரோக்களும் திறந்துகிடந்தன.
பீரோவில் பணம், நகைகள் எதுவும் வைக்காததால் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சித்த மா்ம நபா்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரியவந்தது.
இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் ஜெகதீசன் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்று வீட்டின் கதவு, பீரோவில் பதித்திருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனா். பின்னா் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தொடா்ந்து காவல் துறையினா் கொள்ளையா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.