'நாம் யாருமே போரை விரும்பவில்லை; ஆனால்...' - ஒமர் அப்துல்லா கருத்து
நாம் யாரும் போரை விரும்பவில்லை என்றும் ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்படவே விரும்புவதாகவும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, இந்திய ராணுவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் தொடர்பாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தனர்.
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக பாகிஸ்தானை கடுமையாக சாடினார்.
"நாம் யாரும் போரை விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் தங்கள் துப்பாக்கிகளை கீழே போட வேண்டும்.
இந்த தாக்குதல் பஹல்காமில் தொடங்கியது. அங்கு அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.
பதிலடி கொடுப்பதற்கான சரியான முறை இதுதான். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளன. ராணுவ அமைப்புகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை" என்று கூறியுள்ளார்.