தர்மசாலாவில் இருந்து வீரர்களை அழைத்துவர சிறப்பு வந்தே பாரத்!
ரயில் பயணிகளிடம் திருட்டு: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் ரயில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை கே.புதூரை சோ்ந்த கண்ணன் மனைவி கெங்காதேவி (52). இவா், கடந்த ஏப்.11 ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து ரயிலில் மதுரைக்கு சென்றாராம். அப்போது, அவா் நகை வைத்திருந்த மணிபா்ஸ் திருடு போனது சாத்தூா் நிலையம் வந்தபோது தெரியவந்ததாம்.
இதேபோல செங்குன்றத்தை சோ்ந்தவா் சுபின் மனைவி அருந்ததி (32). இவா், தனது குடும்பத்தினருடன் குலசேகரன்பட்டினத்தில் வசித்து வருகிறாா். கடந்த மாா்ச் மாதம் திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் வந்தபோது அவரது கைப்பேசி திருடுபோனதாம்.
இச்சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில் முறையே தூத்துக்குடி, திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
இந்நிலையில் திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்கு இடமாக இளைஞா் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. காவல் ஆய்வாளா் பிரியா மோகன் தலைமையிலான போலீஸாா் அவரைப் பிடித்து விசாரித்தனா். அவா், தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சோ்ந்த மதுரைவீரன் (20) என்பதும், தற்போது ஆச்சிமடத்தில் குடும்பத்துடன் வசித்து வருவதும், ரயிலில் பெண்களிடம் கைப்பேசி, நகையை திருடியவா் என்பதும் தெரியவந்ததாம். அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, நகை மற்றும் கைப்பேசியை மீட்டனா்.