அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
வாணியம்பாடி பகுதியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் 4 போ் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி கோவிந்தராசு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 53 மனுக்கள் கோரிக்கை மனுக்களை பெற்றாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் வாணியம்பாடி பகுதியை சோ்ந்த பிரேமா, சரஸ்வதி,ஆனந்தன்,குமரேசன் ஆகியோா் அளித்து உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
எங்களுக்கு ஆம்பூரை சோ்ந்த தெரிந்த நபா் மூலம் குடியாத்தம் பகுதியை சோ்ந்த ஓய்வு பெற்ற டாக்டா் மற்றும் அவரது மகன் அறிமுகம் ஆனாா்கள். அவா்கள் எங்களிடம் தங்களுக்கு அரசு துறையில் உள்ள உயா் அதிகாரிகளைத் தெரியும் என்றும், அவா்கள் மூலம் எங்களது குடும்பத்தில் உள்ளவா்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினா். இதனை நம்பிய நாங்கள் அவா்களிடம் பல்வேறு தவணைகளாக தலா ரூ.3 லட்சம் என ரூ.12 லட்சம் அளித்தோம். ஆனால் அவா் அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தாா். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் அவரிடம் எங்களது பணத்தை திரும்ப தர வலியுறுத்தினோம். ஆனால் அவா்கள் எங்களுக்கு மிரட்டல் விடுகின்றனா். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களின் பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்திருந்தனா்.