திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி: தனியாா் நிறுவன மேலாளா் ...
திருச்செந்தூர் கோயில் : `நிழல் விழாத முகூர்த்த நேரம்’ - குடமுழுக்கு நேரத்தை மாற்ற கோரிக்கை
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நுற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நாட்களில் ஆயிரகணக்கான பக்தர்களும் வருகை தந்து முருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.
இக்கோயிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. தொடர்ந்து , 16 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த ஆண்டு வரும் ஜூலை மாதம் 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார்.

இக்கோயிலில் ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி நிதி மற்றும் தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப்பணிகளுடன் கும்பாபிஷேகத்திற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
ஜூலை மாதம் 7-ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுவதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இக்கோயிலில் பணிபுரியும் திரிசுதந்திரர்கள், ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேக நேரத்தை மாற்றி, மதியம் 12.05 முதல் 12.47 மணிக்குள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த திரிசுதந்திரர்கள், ”திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த நாளில் மதியம் 12.05 முதல் 12.47 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி ராஜகோபுர விமான கலசம், வள்ளி தெய்வானை, சண்முகர் விமானம் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி விமானங்களுக்கும் குடமுழுக்கு நடத்திட வேண்டும். நாங்கள் குறிப்பிடும் நேரம் என்பது நிழல் விழாத முகூர்த்த நேரம் ஆகும்.

அந்த அபிஜித் முகூர்த்தத்தில் குடமுழுக்கு நடத்தினால் நாட்டிற்கும், ஆட்சியாளர்களுக்கும், நீதி பரிபாலனை செய்பவர்களுக்கும், மக்களுக்கும் நல்லது நடக்கும். கடந்த 1909-ம் ஆண்டு மூலவர் பிரதிஷ்டை 12 மணிக்கு மேல் நடந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 2009-ம் ஆண்டு காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு செய்யப்பட்டது. அதன் பிறகு பல இயற்கை சீற்றங்கள், மழை வெள்ளம், கொரோனா என பல பாதிப்புகள் எழுந்துள்ளது. எனவே இந்த முறை மதியம் 12 மணிக்கு மேல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் குடமுழுக்கு செய்திட அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றனர்.