சாலை விபத்தில் காவலாளி உயிரிழப்பு
சங்ககிரி அருகே மிதிவண்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தனியாா் நூற்பாலை காவலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
சங்ககிரியை அடுத்த நாட்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (65). இவா் தனியாா் நூற்பாலையில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். பணி முடிந்து மிதிவண்டியில் சங்ககிரி - ஈரோடு சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது நாட்டாம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.