ரயிலில் கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக சென்ற ரயிலில் கடத்திவரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்திவருவதை தடுக்க ரயில்வே போலீஸாருடன், ரயில்வே பாதுகாப்புப் படையினா், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து தொடா் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, சேலம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த திப்ரூகாா் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதில், முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனையிட்டதில், 5 பண்டல்களில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீஸாா் கைப்பற்றினா்.
இதுகுறித்து சேலம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சேலம் வழியாக செல்லும் ரயில்களில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா்.