உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்...
அஷ்ட லட்சுமியரும் சிவபூஜை செய்த தேரழுந்தூர் கோயில்; போனால் விருப்பங்கள் யாவும் நிறைவேறும்
தேரழுந்தூர் சிவாலய மஹா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 04.05.2025 - ஞாயிறு அன்று நிகழ்த்தப்பெற உள்ளது. அதையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை சடங்குகள் முதலான நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இயன்றவர்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு தரிசிக்கலாம்.

மானுட வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத செல்வங்களை எட்டு விதங்களாகப் பிரித்திருப்பது மரபு. இந்த எண்வகைச் செல்வங்களையும் திருமகளின் வடிவாக அஷ்டலட்சுமிகள் என்று போற்றுகிறது நமது சமய வாழ்வியல். திருமகளானவள் குறிப்பிட்ட சில தொன்மையான தலங்களில் அஷ்டலட்சுமிகளின்வடிவுடனே சிவபூஜை செய்திருக்கிறாள். அவற்றுள் ஒன்றுதான் திருவழுந்தூர்.
திருவாகிய மகாலட்சுமி அழுந்தி நிலைத்த இடம் ஆகையால் திருவழுந்தூர் என்கிற பெயர் உண்டாயிற்று என்பது தலபுராணத் தகவல். ஊர்த்துவ ரதன் எனும் அரசனின் பறக்கும் தேரினை தன்னுடைய தவவலிமையால் அகத்தியர் பூமியில் அழுத்திய இடம் இது. ஆகையால் தேரழுந்தூர் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
பெயருக்கான காரணம் எதுவாக இருந்தாலும் சரி. ஏராளமான புராணச் சிறப்புகள் உடைய தலம். சந்தன மரங்கள் நிறைந்த சந்தனாரண்யம் ஆக விளங்கியிருந்த தலமிது. இந்த வனத்தில் தான் ஓர் சந்தனமர நிழலின்கண் அமர்ந்து சந்நியாசி வடிவில் வேதம் உரைத்து அருள் செய்திருக்கிறார் சிவபெருமான் என்றால் ஆச்சரியம் ஆக இருக்கிறது அல்லவா..?!
ஆம். அதற்கான காரணத்தினை அறிந்து கொள்ள நாம் தலபுராணத்தினைச் சற்று நோக்கவேண்டியுள்ளது.
ஒருசமயம் கயிலையில் அரியும்; அரனும் விளையாடிய சொக்கட்டான் நிகழ்விற்கு அம்பிகை நடுவராக பொறுப்பேற்றார். விளையாட்டின் இறுதியில் தன் சகோதரனாகிய திருமால் ஜெயித்ததாக அறிவிக்க ஈசனின் சாபத்திற்கு ஆளானார் அம்பிகை. பசுவடிவம் தாங்கிய கோரூபாம்பிகையாக கயிலை விட்டு நீங்கிய அன்னை பூலோகத்தில் பூஜித்த காவிரிக்கரைத் தலங்கள் ஏராளம். அசிக்காடு, கோமல், மாந்தை, ஆனாங்கூர், கோழம்பம், கரை கண்டம், திருவாவடுதுறை போன்ற சிறப்பான தலங்களுள் இந்த தேரழுந்தூர் முதன்மையானது.
இத்தனைத் திருத்தலங்களிலும் அம்பிகையின் திருவடி படவேண்டும் என்கிற காரிய நிமித்தமாகவே திருவிளையாட்டு நிகழ்த்திய ஈசனின் அருள் நோக்கம் இவ்விதமாக நிறைவேறியது போலும்..!
பசுவுருநாயகியுடன் சகல தேவராதிகளும் தங்கியிருந்த இடம் இந்த தேரழுந்தூர். தேவலோகமே இடம்பெயர்ந்து வந்துவிட்டமையால் சாட்சாத் பரமேஸ்வரனும் இத்தலத்திற்கு வந்து வேதம் பயில்வித்துக் கொண்டிருந்தாராம். ஆதலால் இவருக்கு வேதபுரீஸ்வரர் என்பது திருநாமம். இத்தலத்து தீர்த்தமும் வேதாமிர்த தீர்த்தம் தான். இதில் நீராடியதால்தான் பசுவுரு தாங்கிய அம்பிகைக்கு எழில் வடிவுடன் சிவதரிசனமும் கிடைத்தது. அழகு பொங்கிடும் ரூபத்துடன் நிலைத்த காரணத்தினால் அன்னைக்கு சௌந்தரநாயகி (அழகாம்பிகை)என்கிற நாமம் வழங்கப் பட்டது.

இன்றளவும் இந்த அன்னைக்கு சந்தனம் சாற்றி வழிபடுபவர்களுக்கு அழகினை அள்ளித் தருளுகிறாள் இந்த அழகாம்பிகை. விபத்து, உடற்பிணி முதலானவற்றால் முகம் விகாரமுற்றவர்கள் இத்தலத்தில் வழிபட இழந்த அழகினைப் பெறுவது கண்கூடு.
தவிர பிறந்த வீட்டினருடன் சண்டை மற்றும் பிரிவினால் வருந்துகிற பெண்கள் இவ்வன்னையின் சந்நிதியில் விளக்கேற்றி தங்கள் வருத்தத்தினை முறையிட்டால் உடனே நிவர்த்தி கிடைத்திடும் என்கிற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது.
அகத்திய முனிவருக்கு பிரும்மஹத்தி சாப நிவர்த்தியுடன் குரு முகமாக சிவதரிசனமும் கிடைத்த தலமிது. எனவே குருவருளும் ஞானமும் வேண்டுபவர்களுக்கு உரிய தலமும் இதுதான்.
முப்பெரும் தேவியருடன் ஏனைய தேவருலக சக்திகளும் பசுவடிவத்துடன் உலவிய புண்ணிய தேசம் இது. இவர்களுக்கு பாதுகாப்பாக மேய்ப்பர் வடிவம் தாங்கி வந்த திருமாலும் 'கோஸஹர்' என்கிற ஆமருவியப்பராக தனித்த ஆலயம் கொண்டு கீழ்த்திசை நோக்கி விளங்குகின்றார். இவர்களுக்கு வழித்துணையாக பசுங்கன்றாக மாறி உடன் வந்த விநாயகரும் இத்தலத்தில் வரப்பிரசாதியாக நிலைத்துள்ளார். ஒருசமயம் சம்பந்தர் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளியிருந்தபோது, இரு ராஜகோபுரங்களை ஒரே வீதியில் பார்த்த கணத்தில், எதை நோக்கிச் செல்வது என்கிற குழப்பம் ஏற்பட்டதாம்.
வேதபுரீஸ்வரர் ஆலயத்தினைச் சுட்டிக்காட்டி அவரது ஐயத்தினைப் போக்கி அருளியவர் இப்பெருமான்தான்.
நீண்ட வீதியில் ஒன்றையொன்று பார்த்தபடி இருபெரிய ஆலயங்களைக் காண்பதே பரவசம். அதற்கேற்றாற்போல் தேரடியில் வேதபுரீசர் தரிசனம் அளித்த பின்னரே கோஸஹப் பெருமாள் உலா எழுந்தருகிறார். அதேபோல் பெருமாள் ஆலயத்திலிருந்து பிறந்த வீட்டு சீர் வந்த பிறகே திருமாங்கல்யதாரணம் ஏற்றுக் கொள்கின்றாள் சௌந்தரநாயகி. இப்படி காலங்காலமாக சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி நிற்கின்றன இவ்விரு ஆலயங்களும்..!
தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலம். இவ்வாலயத்திற்குரிய பூர்வ திருமேனிகளும் அருகிலேயே தனித்த கோட்டத்தில் துவஜஸ்தம்பத்திற்கு நேராக பிரதிக்ஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு மாடேஸ்வரி மற்றும் மாடேஸ்வரர் என்பது திருநாமங்கள். கால்நடைகள் நலனுக்காக இவர்கள் சந்நிதியில் வேண்டுதல் செய்தால் கைமேல் பலன் கிடைப்பது உறுதி.மேற்கு நோக்கிய சிவாலயம் என்பதே தனிச்சிறப்பு.
மூலவர் மேற்றிசை பார்த்தபடியும்; அவரை யாண்டும் நோக்கியபடி அம்பிகை கீழ்த்திசை பார்த்தபடியும் எதிரெதிர் திசைகளில் அருளுவது கூடுதல் விசேஷம். மிகவும் அரிதான அமைப்பு இது. சுவாமியின் உபதேசத்தினை இடையறாது செவிமடுக்கும்படி அம்பிகை சிஷ்யபாவனையாக நோக்கியிருப்பதான ஐதீகமே இதற்குக் காரணம்.

மேலாக, ஏதாவது காரணங்களினால் மூதாதையர்களுக்கு கர்ம காரியங்களைச் செய்யத் தவறியவர்கள் இத்தலத்தில் சாந்தி ஹோமம் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கிடும். தவிர ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பரிகாரத் தலமும் இதுவே. இச்செய்திகளுக்கு ஆதாரமான கல்வெட்டுப்பலகை ஒன்று சமீபத்தில் திருப்பணி மேற்கொண்ட சமயத்தில் கிடைத்தது அதிசயம்.
அனைத்திற்கும் மேலாக கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான் அவதரித்த திருத்தலம் இது என்பது கூடுதல் சிறப்பு. கம்பனுக்கு அருளிய காளியன்னை கோயில் மற்றும் அவரது இல்லம் இருந்ததாகக் சொல்லப்படுகிற கம்பர்மேடு எனும் திடல் ஆகியன இத்தலத்தில் குறிப்பிடத்தக்க இடங்கள்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தேரழுந்தூர் சிவாலய மஹா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 04.05.2025 - ஞாயிறு அன்று நிகழ்த்தப்பெற உள்ளது. அதையொட்டி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை சடங்குகள் முதலான நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இயன்றவர்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு தரிசிக்கலாம்.