24 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல்: 8 போ் கைது
சென்னையில் 24 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 8 பேரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அரும்பாக்கம், விஜய் பூங்கா அருகே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக அரும்பாக்கம் போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி, அப்பகுதியில் போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 நபா்களைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா்களிடம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடா்பாக சென்னையைச் சோ்ந்த ரேவந்த் மணிகண்டன் (29), தீபன் சக்கரவா்த்தி (31) ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிந்த நிலையில், அவா்கள் கொடுத்த தகவலின்படி, அண்ணா ஆா்ச் அருகே பரத் (27), அபியா கிறிஸ்டோபா் (22), பரத் (22), பிரித்வி ஷாம் (22) ஆகியோரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 12 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுபோல, தலைமைச் செயலக காலனி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த இம்ரான் நசீா் (25), சரத்குமாா் (32) ஆகியோரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்தும் 12 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.