``நம்முடைய பலமே இது தான்; அமைச்சர்கள் சென்னையில் இருக்காதீர்கள்'' - திமுக கூட்டத்தில் ஸ்டாலின்
தேர்தல் பரபரப்புகள் தொடங்கிவிட்டன. இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவாட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது...
நம்முடைய பலமே!
"நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும்.
தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.
எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் சட்டப்பூர்வமாகவும், மக்கள் ஆதரவுடனும் திமுக அதை எதிர்கொள்ளும்.

தமிழ்நாட்டில் பாஜக...
பா.ஜ.க. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அ.தி.மு.க.வை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பா.ஜ.க. கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.
நாம் எல்லாக் காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம்தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல், மிரட்டல், உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பா.ஜ.க.வின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.
அமைச்சர்கள்...
அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை விட, உங்களது மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும்.
வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை.

ஆறாவது முறை
பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கக் காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன்.
கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்" என்று பேசினார்.
அடுத்ததாக ஜூன் 1-ம் தேதி, மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
