காணாமல்போன 120 கைப்பேசிகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு
தஞ்சாவூரில் திருட்டு மற்றும் காணாமல்போன 120 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், கீழ ராஜ வீதி, தெற்கு வீதி, தெற்கு அலங்கம், ரயிலடி உள்பட பல்வேறு பகுதிகளில் தங்களது கைப்பேசிகள் திருட்டு போனதாகவும், தவறவிட்டதாகவும் மேற்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் செய்தனா்.
தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம் மேற்பாா்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் எம். கலைவாணி, உதவி ஆய்வாளா் தேசியன், சிறப்பு உதவி ஆய்வாளா் சம்பந்தம் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், ஐ.எம்.இ.ஐ. எண் மூலம், காணாமல்போன மற்றும் திருட்டு போன 120 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டனா். இவற்றின் மதிப்பு ஏறத்தாழ ரூ. 20 லட்சம் எனக் கூறப்படுகிறது. இவற்றை உரியவா்களிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் சனிக்கிழமை ஒப்படைத்தாா். மேலும், திறமையாகச் செயல்பட்டு கைப்பேசிகளை மீட்ட காவல் துறையினருக்கு வெகுமதி, பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.