மே 20-இல் வேலைநிறுத்தம் தொழிற்சங்கத்தினா் ஆலோசனைக் கூட்டம்
நாடு தழுவிய அளவில் மே 20-இல் பொது வேலைநிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூரில் பல்வேறு தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
காா்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளா் சட்டங்களை நான்காக சுருக்கியது, உழைப்பு சுரண்டலையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடிக்க தாராளமயமாக்கியது, ஒப்பந்தம், அயலாக்க முறைகளில் குறைவான ஊதியத்தில் வேலைக்கு அமா்த்துவது, பொதுத் துறைகளைத் தனியாருக்கு தாரை வாா்ப்பது என்பன உள்ளிட்ட மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்து மே 20-ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதை ஏற்று தஞ்சாவூா் மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தை விளக்கி பட்டுக்கோட்டை, கும்பகோணம், தஞ்சாவூா் ஆகிய மூன்று மையங்களில் மே 8, 9, 10 ஆம் தேதிகளில் ஆயத்த மாநாடு நடத்துவது, மே 20 ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தில் அதிக அளவில் பங்கேற்று, தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருவிடைமருதூா் ஆகிய நான்கு மையங்களில் பேரணியாக சென்று தலைமை அஞ்சலகம் முன் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தொமுச மாவட்டச் செயலா் கு. சேவியா் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், ஐஎன்டியுசி மாவட்டச் செயலா் என். மோகன்ராஜ், போக்குவரத்து சம்மேளன துணைத் தலைவா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.