தாராபுரம் அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி: முதல்வர் இரங்கல்!
பாபநாசம் சுவாமி கோயிலில் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான பாபநாசம் அருள்மிகு உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் இன்று(மே 4) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப். 27 முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. மே 1ஆம் தேதி முதல் கால யாக பூஜை, மே 2ஆம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை 3ஆம் கால யாகபூஜை, மே 3ஆம் தேதி காலை நான்காம் கால யாக பூஜை, இரவு 5ஆம் கால யாக பூஜை நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான இன்று காலை ஆறாம் கால யாக பூஜையைத் தொடர்ந்து யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் பச்சைக் கொடியசைத்ததையடுத்து உலகம்மை, பாபநாச சாமி விமானங்கள், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரங்களுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
திரண்டிருந்த பக்தர்கள் சிவாய நம, நமச்சிவாய என முழக்கம் எழுப்பி வழிபட்டனர்.
2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 19 ஆண்டுகள் கழித்து தற்போது கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கும்பங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றதையடுத்து ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

திருக்கைலாய மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெற்ற நிலையில் கோடான கோடி பக்தர்கள் குவிந்ததால் வடபாகம் தாழ்ந்து தென் பக்கம் உயர்ந்தது. இதை சமன்படுத்த அகத்திய மாமுனிவரை சிவ பெருமான் தென் பொதிகைக்கு அனுப்பி பூமியை சமன்படுத்தினார்.
இதையடுத்து சிவபெருமானின் திருமணக் காட்சியை காண முடியவில்லை என்று வருத்தமடைந்த அகத்தியரை சமாதானப் படுத்தும் வகையில் பாபநாசத்தில் சிவன் பார்வதி திருமணக் கோலத்தில் காட்சியளித்ததாக ஐதீகம். மேலும் பாபநாசம் சூரிய தலமாகவும் விளங்குகிறது.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போலீஸார், ஊர்க்காவல் படையினர் உட்பட 600க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கும்பாபிஷேக விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார், காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, அம்பாசமுத்திரம் பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா, முன்னாள் பேரவைத் தலைவர் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலர் ரா. ஆவுடையப்பன், விக்கிரமசிங்கபுரம் நகர்மன்றத் தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவர் சிவனு பாண்டியன், சேரன்மகாதேவி சார் ஆசியர் (பொ) சிவகாமசுந்தரி, அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநர் இளையராஜா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, துணை ஆணையர் ஜான்சி ராணி, உதவி ஆணையர்கள் ரா.சுப்புலட்சுமி, தங்கம், செயற்பொறியாளர் சந்திரசேகர், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வைகுண்டம், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலர் கி.கணேசன், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், ஸோகோ மென்பொருள் நிறுவன இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
