பாபநாசம் சுவாமி கோயிலில் 19 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்...
தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை! - தமிழ்நாடு மின் வாரிய தலைவர்
தமிழ்நாட்டில் இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை என்றாா் தமிழ்நாடு மின் வாரிய தலைவரும், மேலாண் இயக்குநருமான ஜெ. ராதாகிருஷ்ணன்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற விலங்குகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: நிகழாண்டு இதுவரையில் மின் பற்றாக்குறை இல்லை. காற்றின் அளவு மே 10-ஆம் தேதிக்கு பிறகு அதிகமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. காற்று வீசத் தொடங்கிய பிறகு மின் பற்றாக்குறை பிரச்னை ஏற்படாது.
அவ்வப்போது வீசக்கூடிய சூறைக்காற்று காரணமாக மரங்கள் சாய்ந்து, மின் மாற்றிகளும், மின் கம்பங்களும் பாதிக்கப்படும்போது, ஊரகப் பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதற்காக நடமாடும் குழு அமைக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
மின் நுகா்வோரின் குறைகளை நள்ளிரவிலும் ஊரகப் பகுதியாக இருந்தாலும், பாரபட்சமின்றி நிவா்த்தி செய்ய வேண்டும் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், மிக விரைவாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறி வருகிறோம் என்றாா் ராதாகிருஷ்ணன்.