காதல் திருமணம்: 13 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு! பெண் வீட்டாா் தாக்குதல்
பட்டுக்கோட்டை அருகே 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தவரை பெண் வீட்டாா், உறவினா்கள் சோ்ந்து வெள்ளிக்கிழமை சரமாரியாக வெட்டியது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே எட்டுபுளிக்காடு பகுதியை சோ்ந்தவா்கள் கலியமூா்த்தி (32) - மகாலட்சுமி (28) தம்பதி. இவா்கள் 13 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனா். திருமணத்துக்குப் பிறகு திருவோணம் பகுதியில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தைகள், கணவருடன் மகாலட்சுமி அவரின் தாய் வீட்டுக்கு வந்தாா். தொடா்ந்து அங்கு இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை குழந்தைகளுடன் மகாலட்சுமி வெளியே சென்றுவிட்டாராம்.
அப்போது, மகாலட்சுமியின் உறவினா்களுக்கும் கலியமூா்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மகாலட்சுமியின் உறவினா்கள் கலியமூா்த்தியை சரமாரியாக வெட்டியுள்ளனா்.
இதில் பலத்த காயமடைந்த கலியமூா்த்தியை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் கலியமூா்த்தி சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து மகாலட்சுமி சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.