சொல்லப் போனால்... சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற இருமுனையும் கூர்கொண்ட கத்தி!
``நாட்டுக்காக தற்கொலை வெடிகுண்டோடு பாகிஸ்தானுக்குச் செல்வேன்'' - கர்நாடகா அமைச்சர் ஜமீர் அகமது கான்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர், பாகிஸ்தான் நடத்திய தீவிரவாத தாக்குதல்தான் இது என இதுவரைப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டாத இந்திய அரசு, பாகிஸ்தான் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானும் அதற்கு எதிர்வினையாற்றி வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கெதிராகப் போர்ச் சூழல் வந்தால் போராடத் தயாராக இருப்பதாகவும், மோடி, அமித் ஷா தற்கொலை வெடிகுண்டு கொடுத்தாலும் மாட்டிக்கொண்டு செல்வேன் எனவும் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியிருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கர்நாடக வீட்டுவசதி, வக்ஃப் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சர் ஜமீர் அகமது கான், "நாங்கள் இந்தியர்கள், நாங்கள் இந்துஸ்தானிகள். எங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களுக்கு எதிராகப் போருக்குச் செல்ல வேண்டுமென்றாலும், நான் போராடத் தயாராக இருக்கிறேன்.
ஒரு அமைச்சராக, என்னை அனுப்பினால் முன்னின்று செல்வேன். தேவைப்பட்டால், நான் தற்கொலை வெடிகுண்டையும் அணிவேன். இதை, நகைச்சுவையாகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ நான் பேசவில்லை. நாட்டிற்கு நான் தேவைப்பட்டால், மோடியும் அமித் ஷாவும் தற்கொலை வெடிகுண்டைக் கொடுக்கட்டும், அதை அணிந்துகொண்டு பாகிஸ்தானுக்குச் செல்வேன்" என்று கூறினார்.

முன்னதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, போர் தொடுப்பதற்கு ஆதரவாகத் தாங்கள் இல்லை என்றும், அமைதி நிலவ வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.