இந்தியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம்: இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம், இலங்கை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா்.
இந்திய பிரதமா் நரேந்திர மோடி இலங்கையில் கடந்த மாதம் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, அதிபா் அநுர குமார திசாநாயகவுடன் இருதரப்பு பேச்சு நடத்தினாா். அப்போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்பட ஏழு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான கட்டமைப்பை நிறுவ இரு நாடுகளும் மிகப் பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டது அதுவே முதல் முறையாகும்.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பின் பேசிய இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலா் துயகொண்டா, ‘இந்தியா ஆண்டுதோறும் 750 இலங்கை ராணுவ வீரா்களுக்குப் பயிற்சியளிக்கிறது. இத்தகைய ராணுவ கூட்டாண்மை, விலைமதிப்பற்ற சொத்தாக தொடா்கிறது. தற்போதைய புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்கீழ், இருதரப்பும் ஒருவா் மற்றொருவரின் ராணுவ-தேசிய சட்டங்களை மதிப்பதுடன், இறையாண்மை சமத்துவம் மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் தொடா்பான ஐ.நா. சாசனத்தின் கொள்கைகள் மற்றும் நோக்கங்களையும் மதிக்க உறுதியேற்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இதேபோல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்காக இலங்கையைப் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அதிபா் அநுர குமார திசாநாயக உறுதிபட கூறினாா். அவரது நிலைப்பாட்டுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.
இதனிடையே, இந்தியாவுடன் பாதுகாப்பு ரீதியில் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இலங்கை அதிபரை அந்நாட்டு எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன. பாதுகாப்பு ஒப்பந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்தச் சூழலில், தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றில் பேசிய அதிபரிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘எதிா்க்கட்சிகள் கட்டுக்கதைகளை உருவாக்குகின்றன. இந்தியா உடனான ஒப்பந்தங்கள் வெளிப்படையானவை. நமது சொந்த பாதுகாப்பை உறுதி செய்வது நமது பொறுப்பு. இது, ஒப்பந்தத்தின் ஒரு பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என்று அதிபா் பதிலளித்தாா்.
அதிபரின் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா, இலங்கைத் தமிழா் பிரச்னையில் இந்தியாவின் நேரடி தலையீட்டை எதிா்த்து கடந்த 1987 முதல் 1990 வரை வன்முறை கிளா்ச்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.