மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு
``40 ஆண்டுகள் விசுவாசமா இருக்கும் எனக்கு அந்த பதவி வேண்டாம்..'' - அதிருப்தியில் தேமுதிக நிர்வாகி
கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 30, 2025), தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபகாரனை நியமித்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா. இதனையடுத்து சிலர் உயர்மட்ட குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
அந்தக் குழுவில் தனக்கு வழங்கப்பட்ட பதவிக்கு ஆட்சேபனை தெரிவித்து தேமுதிக நிர்வாகி ஒருவர் பிரேமலதாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது...

"தே.மு.தி.க பொதுச் செயலாளருக்கு ஒரு தொண்டனின் கடிதம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டிருக்கும் எங்களின் குடும்பத் தலைவர் கேப்டன் விஜயகாந்தை வணங்கி தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு வணக்கத்துடன் எழுதிக் கொள்வது.
கு.நல்லதம்பி, கட்சியின் உண்மை விசுவாசி ஆகிய நான் கட்சித் தலைவர் கேப்டனால் உருவாக்கப்பட்டவன். நான் என்றென்றும் கேப்டனுக்கும், கேப்டனுடைய குடும்பத்தாருக்கும் தே.மு.தி.க வுக்கும் என்றும் நன்றியுடனும் விசுவாசத்துடனும் இருப்பேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜய பிரபாகரன் குரல் சட்டசபையில் ஒலிக்க வேண்டும் நான் மன்றத்திலும், கட்சியிலும் என்னால் முடித்தவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான முறையில் தங்களிடம் கெட்ட பெயர் வாங்காமல் இயக்கத்திற்காகவும் கேப்டனின் குடும்பத்திற்காகவும் என்னால் முடிந்த வரை செயல்பட்டு வருகிறேன்.
மேலும் தருமபுரியில் நடந்து முடிந்த பொதுக்குழுவில் நாமெல்லாம் நீண்ட நாள் எதிர்பார்த்த தெய்வத்திரு கேப்டனின் மறு உருவமும் கேப்டனின் நிழலாகவும் இருக்கின்ற இளைய கேப்டன் விஜய பிரபாகரனுக்கு கட்சி இளைஞரணி செயலாளராக அறிவித்தமைக்கு என்னுடைய உளமாற வாழ்த்துகளை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் தம்பியின் குரல் தமிழக சட்டப் பேரவையில் கழகத் தலைவர் கேப்டனின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வாழ்த்தி மகிழ்கிறேன்.
அண்ணி பிரேமலதா அவர்களின் கவனத்திற்கு அறிந்தோ அறியாமலோ நான் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். இயக்கத்தில் இருந்து என்னை விடுவித்தாலும் என்றுமே நான் தங்களுடைய பிள்ளை.

என்றைக்கும் நான் கட்சியின் கடைகோடி தொண்டன் என்பதை என் உதிரத்தின் ஒவ்வொரு துளியும் சொல்லும் என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொண்டு, கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கும், பொருளாளர் எல்.கே.சுதீஷூக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுச் செயலாளர் பிரேமலதா கடந்த 30.4.2025 அன்று வெளியிட்ட அறிவிப்பில் எனக்கு கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அப்படி விடுவிக்காத பட்சத்தில் நான் கட்சியில் இருந்து விலகிக்கொள்வேன் என்று தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நான் எந்தவித மன வருத்தத்திலும் கூறவில்லை மன மகிழ்ச்சியோடுதான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.

இந்தக் கடிதத்திற்கு பின்னணி என்ன?
மாநில துணை பொதுசெயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்திருக்கிறார் நல்லதம்பி. ஆனால், அந்தப் பதவி கிடைக்காமல் உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி கிடைத்தது இவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விளைவு தான் இந்தக் கடிதம் என்று தகவல்கள் கூறுகின்றனர்.
சமீபத்திய கட்சி பொறுப்புகள் நியமனத்தில் இவருக்கு மட்டுமல்ல பல தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இதை தேமுதிக எப்படி சரி செய்யப்போகிறது?!