எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ வன்னியா்கள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்
கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ரிஷிவந்தியம் தொகுதி பகண்டை கூட்டுச் சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூா்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவ வன்னியா்கள் முன்னேற்ற நலச் சங்கத்தின் சாா்பில் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க தமிழக அரசை வலியுறுத்தி இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கிறிஸ்தவ வன்னியா் முன்னேற்ற நல சங்க மாவட்ட செயலாளா் ஜெய் ஜெரால்டு தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் பிரான்சிஸ், பொருளாளா் அந்தோணிராஜ், கூட்டமைப்புத் தலைவா் தேவ ராயப்பன், மாவட்ட செயல் தலைவா் லூா்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளா்களாக அருட்தந்தை ஜோசப்ராஜ், பாண்டி, கடலூா் உயா்மறை மாவட்ட பிசி, எம்பிசி, டிஎன்சி பணிக் குழு செயலா் மற்றும் அருட்தந்தையா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், கடந்த 35 ஆண்டுகளாக வன்னியா் கிறிஸ்தவா்களாக உள்ள தங்களை பிசி பட்டியலில் இருந்து எம்பிசி பட்டியலில் மாற்ற வேண்டும், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கையில் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கோரிக்கை மனுவை ரிஷிவந்தியம் சட்டப்பேரவை உறுப்பினா் வசந்தம் காா்த்திகேயன் அலுவலகத்தில் வடக்கு ஒன்றியச் செயலாளா் துரைமுருகனிடம் வழங்கினா்.