Health: பட்ஸ் முதல் ஹெட்போன் வரை... காதை ஹைஜீனாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்யலாம்?
பலர், சும்மா இருக்கும்போது சாவி, பென்சில், பேப்பர், பட்ஸ்... என எதையாவது வைத்துக் காது குடைவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள்.
இந்தச் செயல், அவர்கள் ஹைஜீனைப் பாதித்து, நோய் ஏற்படவும், காதில் பிரச்னை ஏற்படவும் காரணமாகிறது.
இதுபற்றி சொல்கிறார் காது, மூக்கு, தொண்டை நிபுணர் பாலமுருகன்.

''காதில் இயற்கையாகவே உருவாகும் மெழுகு, காற்றில் இருக்கும் தூசி, கிருமிகள் எதுவும் உட்காதுக்குள் நுழையாமல் பாதுகாக்கும். இந்த மெழுகு அதிகமாகச் சுரக்கும்போது, அது உட்காதிலிருந்து வெளிக்காதுக்குத் தள்ளப்படும்.
இதைச் சுத்தப்படுத்துவதாக நினைத்து நாம் பயன்படுத்தும் இயர் பட்ஸ், காதில் உள்ள தசைகளைப் பாதிக்கும். இதனால், காதில் எரிச்சல், அரிப்பு ஏற்படலாம்.
மேலும், சில சமயங்களில் வெளியே வர இருக்கும் மெழுகை நாமே உள்ளே தள்ளிவிடும் வாய்ப்பும் உள்ளது. அதேபோல், காதைச் சுத்தப்படுத்துகிறேன் என்ற பெயரில், வெதுவெதுப்பான எண்ணெய், தண்ணீர் போன்றவற்றை எல்லாம் உள்ளே வார்ப்பார்கள்.
இது, கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில், இவை காது ஜவ்வில் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும். நாளடைவில் இந்தப் பழக்கத்தால் காது கேளாமைகூட ஏற்படலாம்.

* காதில் இருந்து தானாகவே வெளிவரும் மெழுகை, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
* தினமும் வெளிக்காதையும் சுத்தமான, ஈரமான துணியால் துடைக்க வேண்டும்.
* குளிக்கும்போது, காதுக்குப் பின்புறம் சோப்பைத் தடவி, மிதமாகத் தேய்த்துவிட வேண்டும்.
* குளித்து முடித்த பின்னர், துண்டால் விரலைச் சுற்றி காது மடல்களையும் குழியின் மேற்புறத்தையும், சுத்தம் செய்ய வேண்டும்.
* எந்தக் காரணத்துக்காகவும் உட்காதினுள் விரலை விடக் கூடாது. காதில் அரிப்பு ஏற்பட்டாலோ சீழ் வடிந்தாலோ, தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம். எனவே, மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

* ஒருவர் பயன்படுத்திய ஹெட்போனை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது.
* ஹெட்போனில் உள்ள ரப்பரை, குறைந்தது வாரத்துக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
* செல்போன் ஸ்பீக்கரில் தூசு சேராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவர் பயன்படுத்திய செல்போனை இன்னொருவர் பயன்படுத்தும்போது, ஒரு முறை துடைத்துவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
* குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுய மருத்துவம் கூடாது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs