ஆபரேஷன் சிந்தூர்: வடமாநிலங்களுக்கான விமான சேவை பாதிப்பு
புது தில்லி: பாகிஸ்தானில் பயங்கரவாத இலக்குகள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பல்வேறு நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு வரும் விமானங்களை இந்திய விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.அமிர்தசரஸ், லே, ஜம்மு, ஸ்ரீநகர்,லே உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் பயங்கரவாத இலக்குகள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பல்வேறு நகரங்களிலிருந்து வடமாநிலங்களுக்கு வரும் விமானங்களை இந்திய விமான நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. ஸ்ரீநகர் உள்பட சில விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஆபரேஷன் சிந்தூர்: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
இதையடுத்து வடமாநிலங்களில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, ஜம்மு, ஸ்ரீநகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட்டுக்கு செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நண்பகல் வரை ரத்து செய்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அமிர்தசரஸுக்குச் செல்லும் இரண்டு சர்வதேச விமானங்கள் தில்லிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இந்த எதிர்பாராத இடையூறு காரணங்களால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துவதாக தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலை மற்றும் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, தர்மசாலா, லே , ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வடமாநிலங்களின் சில விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட பகுதிகளுக்கான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது என ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 3 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.