‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பாகிஸ்தானின் 9 பயங்கரவாத பகுதிகளை தேர்ந்தெடுத்தது ஏன்?
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து துல்லியமான தாக்குதலை வெற்றிகரமாக இந்திய ராணுவம் நடத்தியது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் "பயங்கரவாத முகாம்கள் மீதான துல்லியமான ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்தியாவின் ஆயுதப்படைகள் புதன்கிழமை அறிவித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா். அதற்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளை பிடிக்க தொடா்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே, அனைத்து நட்புறவு அடிப்படையிலான வா்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு உறவுகளை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் முறித்துக் கொண்டுள்ளன. திபெத்தில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியை முழுமையாக நிறுத்தும் நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்தது.
பயங்கரவாதத்தை தனது சொந்த மண்ணில் ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்துமாறு இந்தியா விடுத்த எச்சரிக்கைக்குப் பிறகும் மும்பை தாக்குதலில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதி ஹஃபீஸ் சையது உள்ளிட்டோருக்கு வழங்கும் பாதுகாப்பை பாகிஸ்தான் பலப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
கடந்த ஒரு வாரத்தில் இரு முறை தொலைதூர ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. அத்துடன் எல்லைச்சாவடிகளில் (பாா்டா் செக்-போஸ்ட்) அதிகளவிலான படைகளை போருக்குத் தயாராவது போல குவித்து வந்தது. இரு நாடுகளும் ஏற்கெனவே அவற்றில் வசித்து வந்த இரு நாட்டு குடிமக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்த விவகாரம் தொடா்பாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், முப்படை தளபதிகள், மத்திய துணை ராணுவப்படைகளின் உயரதிகாரிகள், உளவு அமைப்புகளின் தலைவா்கள் உள்ளிட்டோருடன் பிரதமா் நரேந்திர மோடி பல கட்ட ஆலோசனைகளை நடத்தினார்.
மே 4-ஆம் தேதி இந்திய விமானப்படை, கடற்படை தலைமைத் தளபதிகளை சந்தித்த பிரதமா் திங்கள்கிழமை காலை பாதுகாப்பு செயலா் ராஜேஷ் குமாா் சிங்குடனும் மாலை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், முப்படை உளவு அமைப்புகளின் தலைவா்கள், ரா உளவு அமைப்பின் செயலா், இந்திய உளவுத்துறை இயக்குநா் ஆகியோருடனும் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினாா்.
இத்தகைய சூழலில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முந்தைய பாதுகாப்பு ஒத்திகளை நடத்தி மக்களை உளவியல் ரீதியாக எதிா்வரும் சூழ்நிலைகளுக்கு தயாா்படுத்தும் விதமாகவே இந்தப் பாதுகாப்பு ஒத்திகையை புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய அரசு தீா்மானித்துள்ளதாக விஷயமறிந்த பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லை கிராமங்களில் இருப்பதாக கருதப்படும் பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளின் பதுங்கிடங்களில் இந்தியா எந்நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும்,பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் முப்படைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், அந்தத் தாக்குதல் எங்கு, எப்போது, எவ்வாறு நடத்தப்படும் என்பதை மத்திய அரசு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது. இதன் முன்னோட்டமாக மக்களைத் தயாா்படுத்தும் வகையிலேயே திங்கள்கிழமை பாதுகாப்பு ஒத்திகை உத்தரவை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் துல்லியமான தாக்குதலை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வெற்றிகரமாக நடத்தியது.
ஏப். 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது இடங்களில் "பயங்கரவாத முகாம்கள் மீதான துல்லியமான ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற வான்வழித் தாக்குதல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்தியாவின் ஆயுதப்படைகள் புதன்கிழமை அறிவித்துள்ளன. இந்த தாக்குதலை இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகள் இணைந்து மேற்கொண்டன.
இந்தியப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட் மற்றும் சர்ஜால் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான ஐந்து இடங்களை இலக்கு வைத்து ஏற்கனவே முகாம்களை கண்டறியும் டிரோன்களை கொண்டு கண்காணிக்கப்பட்ட இலக்குகளின் அடிப்படையில் அதிநவீன துல்லியமன வெடிபொருள்களைக் கொண்டு சிறப்பு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டன. பாகிஸ்தானின் மிகப்பெரிய உளவுத்துறை நிறுவனமான பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) ஆதரவின் கீழ் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
பாகிஸ்தானில் உள்ள மிக அபாயகரமான இரண்டு பகுதிகளில் இந்திய ராணுவம் எல்லையைக் கடந்துசென்றும், பாகிஸ்தானின் இதயம்போன்ற பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலால் ராணுவ அமைப்புகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துல்லிய தாக்குதலுக்கு 9 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஏன்?
இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துவதற்கு தீவிரமாக ஆதரித்து வந்த அமைப்புகள் குறித்து உளவுத்துறை தகவல் அளித்த தகவலின்படி, இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத உள்கட்டமைப்பின் வலையமைப்பை அழிக்க கவனமாக திட்டமிடப்பட்டு இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலின் நோக்கம், பயங்கரவாத முகாம்களை அழித்து, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதே என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகள் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவை. இவை பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளிடமிருந்து நேரடி ஆதரவையும் தங்குமிடத்தையும் பெறும் அமைப்புகள்.
இந்த அமைப்புகள் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ)நிறுவனத்திடமிருந்து ரகசிய உதவியைப் பெற்று வந்ததாகவும், இந்த அமைப்புகளுக்கு தேவையான நிதி, தளவாடங்கள், ராணுவ உதவி, போர்ப் பயிற்சி போன்றவற்றை பெற்று வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பயிற்சி முகாம்கள் (மர்காஸ்) மற்றும் ஏவுதளங்களில் இருந்து செயல்படுகின்றன, அவற்றில் பல கட்டடங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஊடுருவலுக்கான முயற்சிகள் மற்றும் ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும், பாகிஸ்தானுக்குள் உள்ள பெரிய வசதிகள் மத போதனை, பிரசாரம், தளவாடங்கள் மற்றும் ஆட்சேர்ப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.
துல்லிய தாக்குதல் நடத்தப்பட்ட பாகிஸ்தானின் 9 இடங்கள்
மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது)
இந்த அமைப்பு 2015 முதல் செயல்பட்டு வருகிறது. மர்கஸ் சுப்ஹான் அல்லா, ஜெய்ஸ்-இ-முகமதுவின் தலைமையகம். இது தீவிரவாதத்துக்கான ஆள்சேர்ப்பு, பயிற்சி, போதனை மையமாக செயல்பட்டு வந்துள்ளது. 2019 புல்வாமா தற்கொலை குண்டுவெடிப்பு உள்பட கடந்த கால தாக்குதல்களில் முக்கிய பங்கு வைத்துள்ளது. ஜெய்ஷ்-ஏ-முகமது, இந்த அமைப்பில் பயங்கரவாத அமைப்பின் தலைவா் மௌலானா மசூத் அஸார் மற்றும் பிற மூத்த தலைவர்கள் உள்ளனர்.
மார்கஸ் தைபா, முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா)
இது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது. 2000 ஆம் ஆண்டு பஞ்சாபின் ஷேகுபுராவில் நிறுவப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முகாம்களில் ஒன்று. இது, பயங்கரவாத அமைப்பின் மிக முக்கியமான பயிற்சி மையம். இங்கு ஆண்டுதோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு ஆயுதப் பயிற்சி, மத போதனை மற்றும் தீவிரவாத பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இங்கு ஒரு மசூதி மற்றும் விருந்தினர் மாளிகை கட்ட ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக கூறப்படுகிறது. 2008 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கான முக்கிய பயிற்சி மையமாக இருந்தது. அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி உள்ளிட்ட தீவிரவாதிகள் இங்கு பயிற்சி பெற்றவர்கள்.
சர்ஜால், தெஹ்ரா கலான் (ஜெய்ஸ் இ முகமது)
ஜம்முவின் சம்பாவில் உள்ள சர்வதேச எல்லையிலிருந்து வெறும் 6 கி.மீ தொலைவில் உள்ள நரோவல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார மையத்தில் இருந்து செயல்படுகிறகு ஜெய்ஸ் இ முகமது. இது எல்லைத் தாண்டிய சுரங்கப்பாதை ஊடுருவல் மற்றும் ட்ரோன் அடிப்படையிலான ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய ஏவுதளமாக செயல்படுகிறது. ஜெ.எம் தளபதிகளான முகமது அட்னான் அலி மற்றும் காஷிஃப் ஜான் ஆகியோர் அடிக்கடி இங்கு வந்து செல்கிறார்கள். முஃப்தி அப்துல் ரவூப் அஸ்கரால் மேற்பார்வையிடப்பட்டு வந்தது.
மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன்)
பூட்டா கோட்லி அரசாங்க வளாகத்திற்குள் அமைந்துள்ளது ஹிஸ்புல் முஜாஹிதீன் முகாம். பாகிஸ்தானின் ஒரு பகுதியான இந்த முகாமில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஜம்முவுக்குள் ஊடுருவல்களுக்கு முகாமாக இருந்துள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதக் குழுவின் கோட்டை. முகமது இர்ஃபான் கான் அல்லது இர்ஃபான் தாண்டா தலைமையிலான இந்த முகாமில் எப்போதும் 20 முதல் 25 ஆயுதமேந்திய தீவிரவாதிகள் இருந்து வந்துள்ளனர். இந்த முகாமில் இருந்துதான் பதான்கோட் விமானப்படைத் தளத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 4 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரைக் கொன்ற தீவிரவாதிகள் இந்த முகாமில்தான் பயிற்சி பெற்றவர்கள்.
மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா (லஷ்கர் இ தொய்பா)
எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 9 கி.மீ தொலைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பர்னாலாவின் புறநகரான பீம்பரில் அமைந்துள்ளது லஷ்கர் இ தொய்பா முகாம். இங்கிருந்து பூஞ்ச், ரஜோரி மற்றும் ரியாசி பிரிவுகளுக்குள் தீவிரவாதிகளை அனுப்புதல் மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தப்பட்டு வந்துள்ளது. இது லஷ்கர் இ தொய்பாவின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மர்கஸ் அப்பாஸ், கோட்லி (ஜெய்ஸ் இ முகமது)
லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலை படையினருக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு 115 தீவிரவாதிகள் தங்க வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. பூஞ்ச் மற்றும் ரஜோரி வழியாக ஊடுருவல் நடத்தப்பட்டு வருகிறது. ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் முஃப்தி அப்துல் ரவூப் அஸ்கரின் நெருங்கிய உதவியாளரான காரி சர்ரார் தலைமையிலான ஒரு முக்கிய மையமாகும். இந்த தீவிரவாத முகாமில் இருந்து தான் பூஞ்ச் மற்றும் ரஜோரி வழியாக ஊடுருவல்கள் நடந்து வந்துள்ளது. இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பால் தேடப்படும் முக்கிய தீவிரவாதி சர்ரார்.
மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி (ஹிஸ்புல் முஜாஹிதீன்)
ஹிஸ்புல் முஜாஹிதீன் இன் பழமையான முகாம்களில் ஒன்று. மலை, காடு மற்றும் கொரில்லா போர் பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கிச் சூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. எல்லைத் தாண்டிய ஊடுருவல்களுக்கு தீவிரவாதிகளை தயார்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் (லஷ்கர் இ தொய்பா)
பைத்-உல்-முஜாஹிதீன் என்றும் அழைக்கப்படும் இந்த லஷ்கர்-இ-தொய்பா முகாம், முசாபராபாத்-நீலம் சாலையில் உள்ள செல்லபந்தி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 2000 இன் முற்பகுதியில் இருந்து செயல்பட்டு வரும் இந்த முகாமில் இருந்து தான் அஜ்மல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மத போதனை, உடல் சீரமைப்பு, ஜிபிஎஸ் பயன்பாடு மற்றும் ஆயுதங்கள் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த முகாமில் பாகிஸ்தான் ராணுவ பயிற்சியாளர்கள் ஆயுதப் பயிற்சிக்கு அளித்து வருவதாக கூறப்படுகிறது.
சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் (ஜெய்ஸ் இ முகமது)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள இந்த பயங்கரவாத முகாம் முசாபராபாத்தில் செங்கோட்டைக்கு எதிரே அமைந்துள்ளது. இது ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பயிற்சிக்கான மையமாக இருந்து வந்துள்ளது. இங்கிருந்து தான் ஜம்மு - காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படுகின்றன. இங்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உயரடுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
மேற்கண்ட 9 இடங்களில் சுமார் 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளின் இந்தியாவின் துல்லியமான தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.