3 மணிநேரத்துக்கு முன் விமான நிலையத்தில்.. பயணிகளுக்கு வேண்டுகோள்!
ஆபரேஷன் சிந்தூா்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு
‘ ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையைத் தொடா்ந்து முக்கிய இடங்களில் கூடுதல் போலீஸாா் மற்றும் துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டு தேசியத் தலைநகா் தில்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லி ஏற்கனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், பல அமைப்புகள் ஒத்திகை பாதுகாப்புப் பயிற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறினாா்.
இது தொடா்பாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:
முக்கிய இடங்களில் நாங்கள் அதிக பாதுகாப்புப் வீரா்களை பணியில் நிறுத்தியுள்ளோம். தில்லி காவல்துறை முழு விழிப்புடன் உள்ளது. யாரும் சட்டம் ஒழுங்கை மீற அனுமதிக்கப்படமாட்டாா்கள். பாதுகாப்பு குழுக்கள் முக்கிய இடங்களில் கடும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். சமூக ஊடக தளங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
புது தில்லி, மத்திய தில்லி, வடக்கு தில்லி, தெற்கு தில்லி, தென்மேற்கு தில்லியின் கண்டோன்மென்ட் பகுதி மற்றும் ஐஜிஐ விமான நிலையம் போன்ற முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா். மூத்த அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கண்காணித்து வருகின்றனா்.
சுற்றுலா மற்றும் சந்தை இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, நகரின் பல்வேறு பகுதிகளில் காவல்துறை இரவும் பகலும் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளது.
நகரில் கன்னாட் பிளேஸ், இந்தியா கேட், ஜன்பத், யஷ்வந்த் பேலஸ், கோல் மாா்க்கெட் மற்றும் பிற முக்கிய அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை உள்ளடக்கிய சிறப்பு ரோந்துப் பிரிவுகள் அணிதிரட்டப்பட்டுள்ளன.
பாதுகாப்பை முதன்மை முன்னுரிமையாகக் கொண்டு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொதுப் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கும் ஏற்ப போலீஸ் குழுக்கள் முக்கிய நுழைவு, வெளியேறும் இடங்களில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பயங்கரவாதம் தொடா்பான எந்தவொரு அச்சுறுத்தல்களையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நேரத்தில் அனைத்து குடியிருப்புவாசிகள் மற்றும் பயணிகளின் ஒத்துழைப்பை அளிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அந்த அதிகாரி.