இனி தோட்டத்துப் பகுதிகளில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது: நயினார் நாகேந்திரன்
கொங்கு பகுதியில் இனி தோட்டத்துப் பகுதிகளில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பற்றி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது பேசிய அவர், பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் நிர்வாகி பெண்ணின் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதுவரை இதுதொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி குற்றம் செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்காத அதிகாதிகள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகிரி இரட்டை கொலைச் சம்பவம் பதற்றத்தை அளித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தோட்டத்தை காலி செய்து வெளியூர் செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் பல்லடம், சிவகிரி உள்ளிட்ட இரண்டு சம்பவங்களை பொருத்தவரை தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. கொங்கு பகுதியில் இனி தோட்டத்துப் பகுதியில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டு சிறு குழந்தைகள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைவரையும் விடுமுறைக்கு வந்தவர்களை ஊருக்கு அனுப்புகிறார்கள்.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுக்கும் சட்டத்திற்கு புறம்பாக தங்கி உள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வேண்டும் என கடிதம் எழுதியுள்ள நிலையில் அதற்கான எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுத்ததாக தெரியவில்லை. வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை கைது செய்ய வேண்டும்.
இதேபோல் நாம் தமிழ்நாட்டில் உள்ளோமா வேறு எங்கேயாவது உள்ளோமா என்ற சூழலை ஏற்படுத்துகிறது. திமுக என்றுமே, காவல் நிலையத்தில் யார் வழக்கு தொடுக்கிறார்களோ அவர்களை முதலில் பிடித்து போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளது. அதுபோலத்தான் மதுரை ஆதீனம் விவகாரத்திலும் நடந்துள்ளது.
நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மதப் பிரச்னை குறித்து பேசவில்லை. தீவிரவாதம் குறித்தும் பயங்கரவாதம் குறித்தும் மட்டுமே பேசப்பட்டது. மதங்கள் குறித்து பேசுவதாகத் தூண்டி விடுவதே முதலமைச்சர்தான்.
அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட்டதால் சிறுபான்மை ஓட்டு பாதிக்கப்படாது. கூட்டணி குறித்து வரவேற்று பேசியதற்காக ஐக்கிய ஜமாத் அமைப்பு நிர்வாகியான அதிமுக நிர்வாகி அப்துல் ஜாபர், ஜமாத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட சூழலில் பல ஜாபர்கள் பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்" என்று தெரிவித்தார்.