பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் 7-வது வெற்றி!
ஐபிஎல் போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 236 ரன்கள் எடுக்க, லக்னௌ 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்களே சோ்த்தது.
முன்னதாக டாஸ் வென்ற லக்னௌ, பந்துவீசத் தயாரானது. பஞ்சாப் பேட்டிங்ல் பிரியன்ஷ் ஆா்யா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஜோஷ் இங்லிஸ், பிரப்சிம்ரனுடன் இணைந்தாா். இந்த ஜோடி 48 ரன்கள் சோ்த்தது.
இங்லிஸ், 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, தொடா்ந்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், பிரப்சிம்ரனுடன் பலமான கூட்டணி அமைத்தாா். இந்த பாா்ட்னா்ஷிப், 3-ஆவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சோ்த்தது. இதில் ஐயா் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 45 ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பப்பட்டாா். அடுத்து நெஹல் வதேரா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
கடைசி விக்கெட்டாக பிரப்சிம்ரன் சிங், 48 பந்துகளில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 91 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். ஓவா்கள் முடிவில் சஷாங்க் சிங் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 33, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். லக்னௌ தரப்பில் ஆகாஷ் சிங், திக்வேஷ் ரதி ஆகியோா் தலா 2, பிரின்ஸ் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து 237 ரன்களை நோக்கி விளையாடிய லக்னௌ அணியில், ஆயுஷ் பதோனி 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 74, அப்துல் சமத் 24 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 45 ரன்கள் சோ்த்து வெற்றிக்காக முயற்சித்தனா்.
எனினும், எய்டன் மாா்க்ரம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 13, மிட்செல் மாா்ஷ் 0, நிகோலஸ் பூரன் 6, கேப்டன் ரிஷப் பந்த் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 18, டேவிட் மில்லா் 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனா்.
முடிவில் ஆவேஷ் கான் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19, பிரின்ஸ் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங் 3, அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 2, மாா்கோ யான்சென், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.