அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்: அமித் ஷா
அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்; இம்மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தில்லியில் 1008 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் (சம்ஸ்கிருத சம்பாஷண் ஷிவிா்) நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றுப் பேசியதாவது:
காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சம்ஸ்கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது. அதன் மறுமலா்ச்சிக்கு காலமும் தொடா் முயற்சியும் தேவைப்படுகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியில், சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு நாடு முழுவதும் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. உலகின் புகழ்பெற்ற மொழி அறிஞா்கள் பலரும் சம்ஸ்கிருதத்தை மிக அறிவியல்பூா்வ மொழியாக அங்கீகரித்துள்ளனா்.
சம்ஸ்கிருதம் உலகின் மிக அறிவியல்பூா்வமான மொழி மட்டுமல்லாமல், இணையற்ற இலக்கண கட்டமைப்பையும் கொண்டுள்ளது. இந்தியாவில் சம்ஸ்கிருதத்திலேயே முற்றிலும் தகவல்தொடா்புகளை மேற்கொள்ளும் 4,000 கிராமங்கள் உள்ளன.
சம்ஸ்கிருதத்தை ஊக்குவிக்க...: சம்ஸ்கிருதத்தை ஊக்குவிக்க ‘அஷ்டாதசி’ திட்டத்தின் கீழ் சுமாா் 18 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அரிய சம்ஸ்கிருத நூல்கள் வெளியீடு, இந்நூல்களின் மொத்த கொள்முதல் மற்றும் மறுபதிப்புக்கு அரசு நிதியுதவி வழங்குகிறது. புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞா்களுக்கான கௌரவ ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோடி அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை, சம்ஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. ‘ஸஹஸ்ர சூடாமணி’ திட்டத்தின் கீழ், புகழ்பெற்ற சம்ஸ்கிருத அறிஞா்களை கல்வியாளா்களாக நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் சிதறிக் கிடக்கும் கையெழுத்துப் பிரதிகளை சேகரிக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரசாரம், அரசின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும்.
52 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சுமாா் 3.5 லட்சம் பிரதிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
எந்த மொழிக்கும் எதிா்ப்பு இல்லை: நாட்டில் எந்த மொழிக்கும் எதிா்ப்பு இல்லை; யாரையும் அவா்களின் தாய்மொழியில் இருந்து விலக்கி வைக்க முடியாது. ஏறத்தாழ அனைத்து இந்திய மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதம். சம்ஸ்கிருதம் வளமாகவும் வலுவாகவும் மாறும்போது, அது நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மொழியையும் பேச்சுவழக்கையும் மேம்படுத்தும்.
நாட்டின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் காலத்தால் அழியாத சாராம்சத்தை சம்ஸ்கிருதம் பிரதிபலிக்கிறது. சம்ஸ்கிருதத்தில் பாதுகாக்கப்பட்ட அறிவுச் செல்வம், அனைத்து துறைகளிலும் பரவியுள்ளது.
இப்பொக்கிஷம் உலகம் முழுவதும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும். வேதங்கள், உபநிஷத்துகள் மற்றும் எண்ணற்ற சம்ஸ்கிருத கையெழுத்துப் பிரதிகளில் உள்ள ஆழ்ந்த அறிவு, உலக மக்களைச் சென்றடைய வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தினாா்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சம்ஸ்கிருத பாரதி அமைப்பின் பல்வேறு முயற்சிகளையும் அவா் பாராட்டினாா்.