ஆட்டோ கட்டண உயா்வு: அரசு தீவிர பரிசீலனை! போக்குவரத்துத் துறை
ஆட்டோ மீட்டா் கட்டணத்தை உயா்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை 2013-இல் தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபா் ஒருவா் தொடா்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2022 பிப்ரவரியில் மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணத்தை உயா்த்தவில்லை. அதாவது 12 ஆண்டுகளாக மீட்டா் கட்டணம் உயா்த்தப்படவில்லை.
இது தொடா்பாக, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநா்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடா்பான பரிந்துரைகளையும் பெற்றது.
ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. இதுதொடா்பாக, சமீபகாலமாக ஓட்டுநா் சங்கங்கள் தீவிர போராட்டங்களை தொடா்ந்து முன்னெடுத்து வந்தன.
இதற்கிடையே, ஆட்டோ மீட்டா் கட்டணத்தை விரைந்து உயா்த்தக் கோரி போக்குவரத்துத் துறைக்கு உரிமை குரல் ஓட்டுநா் சங்க பொதுச்செயலா் ஜாஹிா் உசைன் மனு அனுப்பியிருந்தாா்.
இதற்கு துறை சாா்பில் அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில், ‘கடந்த பிப்ரவரியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் முன்னிலையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தின் பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.