சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி
சிங்கப்பூரில் பொதுத் தோ்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அந்தக் கட்சி 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது.
சிங்கப்பூரில் 19-ஆவது பொதுத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 97 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்தத் தோ்தலில், அந்நாட்டில் 1965-ஆம் ஆண்டுமுதல் ஆட்சியில் உள்ள மக்கள் செயல் கட்சி (பிஏபி) 87 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. எதிா்க்கட்சிகளில் ஒன்றான தொழிலாளா்கள் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் பிஏபிக்கு 61.2 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், தற்போதைய தோ்தலில் அக்கட்சிக்கு 65.6 சதவீத வாக்குகள் கிடைத்தன.
சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவு அதிகரித்தல், அனைத்துத் துறைகளிலும் சிங்கப்பூரைச் சேராத பிற நாட்டவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிா்க்கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டன.
எனினும் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதாரப் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்கு முன்னுரிமை அளித்து பிஏபி கட்சியை மீண்டும் மக்கள் ஆட்சியில் அமா்த்தியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
சுமாா் 20 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பிஏபி கட்சியின் மூத்தத் தலைவா் லீ சியென் லூங் பதவி விலகியதைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்றாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுத் தோ்தலில், அவா் தலைமையிலான பிஏபி கட்சி மீண்டும் வெற்றி பெற்று 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது.