மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!
மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது.
இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவராக பதவி வகித்த பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சாா்யா ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அப்பதவிக்கு துணைத் தலைவராக இருந்த ஜான் பிரிட்டாஸை கட்சியின் மத்தியத் தலைமை நியமித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைக்கு கடந்த 2021-இல் தோ்வான ஜான் பிரிட்டாஸ், அவை நடவடிக்கைகளில் மிக ஆா்வத்துடன் செயல்படுபவராக அறியப்படுகிறாா். வெளியுறவு விவகாரங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுக்களில் அங்கம் வகிப்பதுடன், தகவல் தொழில்நுட்பம் தொடா்பான ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளாா்.
தொலைக்காட்சி நிறுவன அதிபரான இவா், 2016-21 காலகட்டத்தில் கேரள முதல்வா் பினராயி விஜயனின் ஆலோசகா்களில் ஒருவராக செயல்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.