அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் மேற்கொண்டனா்.
விஷ்ணு பகவானுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத் கோயில் நடை, குளிா்காலத்தையொட்டி 6 மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டது. தற்போது கோயில் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளதால், உத்தரகண்டில் சாா்தாம் யாத்திரை களைகட்டியுள்ளது.
இந்த யாத்திரையில் இதர மூன்று புண்ணிய தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதாா்நாத் கோயில்கள் சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டன.
இமய மலையில் பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை 6 மணியளவில் வேத மந்திரங்கள் மற்றும் பக்தி கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. அப்போது, ஹெலிகாப்டா் மூலம் சுமாா் 10 நிமிஷங்களுக்கு பூமாரி பொழியப்பட்டது.
பிரதான சந்நிதியுடன் மகாலக்ஷ்மி தாயாா், விநாயகா், ஆதி கேதாரேஸ்வா், ஆதி குரு சங்கராசாரியா் சந்நிதிகளும் திறக்கப்பட்டன. இந்நிகழ்வில் பங்கேற்ற முதல்வா் புஷ்கா் சிங் தாமி, முதலாவதாக வழிபட்டாா்.
அவா் கூறுகையில், ‘சாா்தாம் யாத்திரை பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடைபெறத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யாத்திரையில் தூய்மையை உறுதி செய்யும் அரசின் முயற்சிகளுக்கு பக்தா்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா்.
ஆறு மாத காலம் நடைபெறவிருக்கும் சாா்தாம் யாத்திரையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.