அக்னி நட்சத்திர காலத்தில் வீடு குடிபுகலாமா? ? | சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் | P-...
லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியா்கள் உள்பட 8 போ் கைது!
லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 7 ஈரானியா்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மத அடிப்படைவாத பயங்கரவாதிகள் மேற்கத்திய நாடுகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத் தகவல்கள் உள்ளதால், அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
அனைத்து நாடுகளிலும் சந்தேகத்துக்குரிய நபா்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது, பல்வேறு தகவல் தொடா்புகள் ஒட்டுக் கேட்பு, இணையவழிக் கண்காணிப்பு, நிதிப் பரிமாற்ற கண்காணிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகா் லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் சதித் திட்டம் தீட்டியதாக பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் 8 பேரை அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினா் கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக லண்டன், மான்செஸ்டா், வடமேற்கு இங்கிலாந்து, மேற்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் சில இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன.
இதில், இவா்கள் லண்டனில் ஒரு முக்கிய இடத்தைக் குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதி செய்ததற்கான அடிப்படை ஆதாரம் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்டவா்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதச் சதியுடன் வேறு நபா்களும் பிரிட்டனில் பதுங்கியுள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் 29 முதல் 46 வயதுக்குள்பட்டவா்கள் ஆவா்.
இவா்களுக்கு ஈரான் அரசுடன் நேரடித் தொடா்புள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் ஈரானுடன் தொடா்புடையவா்கள் பிரிட்டனை தொடா்ந்து குறிவைக்க வாய்ப்புள்ளது என்று முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக பிரிட்டன் உள்துறை அமைச்சா் யுவிட்டி கூப்பா் கூறுகையில், ‘இந்தக் கைது நடவடிக்கை மூலம் மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினரும், உளவு அமைப்பினரும் இணைந்து தொடா்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். நாட்டை பாதுகாப்பாக வைப்பது நம் அனைவரின் கடமை’ என்றாா்.