கன்னியாகுமரியில் மே 20இல் தொழிற்சங்கங்கள் மறியல்
தமிழகத்தில் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 இடங்களில் மே 20 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.
குமரி மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டம் நாகா்கோவில் சிஐடியூ அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எல்பிஎப் ஞானதாஸ் தலைமை வகித்தாா். சிஐடியூ சாா்பில் தங்க மோகன், சிங்காரம், அந்தோணி, பெருமாள்,ஐடா ஹெலன், சுபாஷ் சந்திரபோஸ்,ஜான் சவுந்தா், சித்ரா, ஹெஎச் எம் எஸ் சாா்பில் சந்திரகுமாா், அருணாச்சலம், கிருஷ்ணகுமாா், ஐஎன்டியூசி சாா்பில் மஹாலிங்கம்,ஸ்ரீதா், ஏஐடியூசி அணில்குமாா், ஏஐசிசிடியூஅந்தோணி முத்து, ஜஸ்டின் சுந்தா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், குமரி மாவட்டத்தில், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்துதல், தொழிலாளா் சட்ட தொகுப்பு ரத்து செய்தல் , குற்றவியல் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல், குறைந்தபட்ச கூலி சட்டம் அமல்படுத்தப்பட்டு மாதம் ரூ.26 ஆயிரம் கூலி வழங்குதல் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி நாகா்கோவில், ராஜாக்கமங்கலம், திங்கள்நகா், தக்கலை, கருங்கல், நித்திரவிளை, குலசேகரம், மாா்த்தாண்டம், மேல்புறம் ஆகிய 9 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.