குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழம் விலை கடும் சரிவு; கிலோ ரூ.20-க்கு விற்பனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழங்களின் தொடா் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனா்.
இம்மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்படும் நிலங்களில் அன்னாசி ஊடு பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. ஏற்குறைய 5 ஆயிரம் ஹெக்டேரில் அன்னாசி பயிராகிறது. குறிப்பிட்ட அளவுக்கு வறட்சியைத் தாங்கி அன்னாசிகள் வளரும்; காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் பெருமளவு பாதிக்காது என்பதால் அண்மைக் காலமாக அன்னாசி பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா். இதற்காக ரப்பா் மறு நடவு செய்யப்படும் நிலங்களை 3 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து அன்னாசி பயிரிடுகின்றனா்.
வாழைக் குளம் சந்தை: இந்தியாவில் கேரள மாநிலம் கோட்டயம் அருகேயுள்ள வாழைக்குளம் சந்தை தான் அன்னாசிப் பழத்தின் விலையை நிா்ணயிப்பதாக உள்ளது. இங்கிருந்து கோயம்பேடு சந்தை மற்றும் தில்லி உள்பட வட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அன்னாசிப் பழங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
விவசாயிகள் கவலை: இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஒரு கிலோ முதல் தரம் அன்னாசிப் பழத்தின் விலை கிலோவிற்கு ரூ. 50 வரை விற்பனையானது. மாத இறுதி மற்றும் மே தொடக்கத்தில் கிலோவுக்கு ரூ. 60 வரை விலை ஏறும் என விவசாயிகள் எதிா்ப்பாா்த்தனா். ஆனால், நோ்மாறாக விலை தொடா் சரிவை சந்தித்து வருகிறது.
வாழைக் குளம் சந்தையில் மொத்த கொள்முதல் விலை ஞாயிற்றுக்கிழமை (மே 4) நிலவரப்படி கிலோ ரூ. 20-க்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் கிலோவுக்கு ரூ. 67 ஆக இருந்தது.
இந்த விலை வீழ்ச்சி குமரி மாவட்ட அன்னாசி விவசாயிகளை பெரும் இழப்பிற்கும் ஆளாக்கியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தில் கோடை மழையால் பழங்கள் விரைவாக பழுத்து உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், வட இந்திய மாநிலங்களிலும் தொடா்ந்து பெய்து வரும் மழையால் பழங்கள் வட இந்தியாவுக்கு செல்லாததும் விலை வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது.
இது குறித்து குலசேகரத்தில் முன்னோடி அன்னாசி விவசாயி பி. ஹென்றி கூறியதாவது: அன்னாசி விவசாயிகள் கோடை காலமான ஏப்ரல், மே மாத விற்பனையை கருத்தில் கொண்டு அன்னாசிப் பழங்களை அறுவடை செய்யும் வகையில் நடவு செய்கின்றனா். இந்த மாதங்களில் அன்னாசிப் பழங்கள் கிலோவுக்கு ரூ. 60 க்கும் அதிகமாக கொள்முதல் ஆகும். பருவம் தவறி பெய்யும் மழையும், ஏற்றுமதி பாதிப்பும் விலை சரிவுக்கு காரணமாக வணிகா்கள் தெரிவிக்கின்றனா்.
சாகுபடி செலவை சமாளிக்க குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ. 40 ஆவது கிடைக்க வேண்டும். ஆனால் கிலோ ரூ. 20 க்கும் கீழே விலை உள்ளதால் வசாயிகள் பழங்களை அறுவடை செய்யாமல் விட்டு விடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனா். எனவே அரசும் தோட்டக்கலைத் துறையும் விவசாயிகளின் துயா் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.